செட்டில்மெண்ட்–3

செட்டில்மெண்ட்–3

இரண்டாம்வகை செட்டில்மெண்ட் (குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரம்)

இந்த இரண்டாம் வகை செட்டில்மெண்ட் பத்திரத்தின் மூலம் சொத்தை தன் வாரிசுகளுக்கு கொடுப்பவர், பொதுவாக பாதி மனதுடன் கொடுப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒருவருக்கு, வயது அதிகமாகும்போது, நம்பிக்கை குறையும். தனக்கு ஒரு பாதுகாப்பு இல்லையே என்று ஏங்க ஆரம்பிப்பர். அந்த நிலையில், அவர் பெயரில் உள்ள சொத்தை, மனைவி கேட்டாலும், மகன் கேட்டாலும், மகள் கேட்டாலும், வேண்டா வெறுப்பாகவே எழுதிக் கொடுப்பர். தனக்கு அதில் ஒரு சிறு உரிமையையாவது நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பர். அதனால், தன் ஆயுளுக்குப்பின் அந்த சொத்தை கொடுப்பதாகவும், அல்லது அதில் குடியிருக்கும் உரிமையையாவது தனக்கு நிறுத்தி வைத்துக் கொள்வேன் என்றும் அந்த செட்டில்மெண்டில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி எழுதிக் கொள்வார். இந்த வகை செட்டில்மெண்ட் “அன்றே முழு உரிமையுடன் கொடுத்த செட்டில்மெண்ட்” என்னும் முதல் வகையைச் சேராது. பின் ஒருநாளில் கிடைக்கும் சொத்து என்ற இரண்டாம் வகையைச் சேரும்.

இப்படி அரை மனதாக எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரம் ஏதோ ஒரு நெருக்கடியில் எழுதப் பட்டிருந்தால், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அதை எழுதி வைத்தவர் அதை ரத்து (Revocation or Cancellation) செய்ய நினைப்பாராம். அல்லது அவ்வாறு அதை ரத்து செய்யும்படி அவரின் மற்ற வாரிசுகள் அவருக்கு அந்த நெருக்கடியைக் கொடுப்பார்களாம். அவ்வாறு ரத்து செய்துவிட்டால், அந்த செட்டில்மெண்ட் பத்திரம் சட்ட குழப்பத்துக்குள் போய்விடும்.

செட்டில்மெண்ட் பத்திரத்தில் அன்று சொத்தைக் கொடுக்காமல், பின் ஒருநாளில் கிடைப்பதாக எழுதி இருப்பதை, “உயில்போல” எழுதிய செட்டில்மெண்ட் என்பர். ஒரு உயில் பத்திரத்தை, எழுதியவரின் வாழ்நாளில், எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம். ஆனால் ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் ஒரு சொத்தை எழுதிக் கொடுத்திருந்தால் அதை அவ்வாறு (உயிலைப்போல) ரத்து செய்துவிட முடியாது. ஆனாலும், அந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் சொத்தின் உரிமையை கொடுப்பதை தள்ளிப்போட்டிருந்தால், அத்தகைய செட்டில்மெண்டை ரத்து செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. ஏனென்றால், அந்த பத்திரத்துக்கு “செட்டில்மெண்ட் பத்திரம்” என்று பெயர் வைத்திருந்தாலும் அது “ஒரு உயிலைப்போன்ற பத்திரம்” என்று சட்டம் கருதுகிறது. உயிலை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம். எனவே ஒரு உயிலைப்போல எழுதி அதற்கு செட்டில்மெண்ட் என்று பெயர் வைத்திருந்தாலும், அதற்குறிய ஸ்டாம்பு கட்டணம் கட்டப்பட்டிருந்தாலும், அது ஒரு உயில்தானே தவிர அது ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் அல்ல என்று பல்வேறு தீர்ப்புகளில் பல உயர்நீதி மன்றங்களும், உச்சநீதிமன்றமும் சொல்லி உள்ளது.

ஆக, ஒரு பத்திரத்தில், “உரிமை” மாற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய முடியாது. அவ்வாறு உரிமை மாற்றம் செய்யப்படாமல் இருந்தால், அதை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துவிடலாம். இதுவே சட்டம். இதை எப்படி முடிவு செய்யமுடியும். ஒவ்வொரு பத்திரத்தை படித்துப் பார்த்தால், அதில் உள்ள வாசகங்களைக் கொண்டு, அந்த சொத்தின் உரிமையை அன்றே மாற்றி கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை படித்துப் பார்க்காமல், அது ரத்து செய்ய தகுதியுள்ள பத்திரமா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாது.

செட்டில்மெண்ட் பத்திரத்தை பதிவு செய்வது;

ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை, அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு (ரத்த உறவுகளுக்கு) எழுதிக் கொடுத்து அதன் மூலம் அவரின் சொத்தை ஒப்படைக்கலாம். ரத்த உறவுகள் என்றால் யார் யார் என்று இந்திய ஸ்டாம்பு சட்டம் ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, தாத்தா, பாட்டி (தந்தைவழி, தாய்வழி உட்பட), தந்தை, தாய் (வளர்ப்புதந்தை, வளர்ப்புதாய் உட்பட), கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி (மகன்வழி, மகள்வழி உட்பட), இவர்கள் ரத்த வழி உறவினர்கள் என்று விளக்கி உள்ளது. பின்னர், சகோதரன், சகோதரி இவர்களும் ரத்த உறவில் சேர்த்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அந்த சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, இவர்களைத் தவிர வேறு யாரும் ரத்த உறவு ஆக முடியாது. நம் சகோதரனின் மகன், மகள் இதில் சேர மாட்டார்கள். ரத்த உறவுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தால், அது செட்டில்மெண்ட் பத்திரம்; இந்த உறவுகளைத் தாண்டி வேறு உறவுகளுக்கோ, வேறு நபர்களுக்கோ சொத்தை எழுதிக் கொடுத்தால் அது கிப்ட் என்னும் தானப் பத்திரம் ஆகும். உறவுகளுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்திற்கு ஸ்டாம்ப் கட்டணம், சொத்தின் மதிப்புக்கு ஒரு சதவீதம் என்றும் அதிக பட்சமாக ரூ.25,000/- என்றும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. உறவுகள் அல்லாதவருக்கு கொடுக்கும் கிப்ட் என்னும் தானப் பத்திரத்துக்கு சொத்தின் மதிப்புக்கு 8 சதவீதம் ஸ்டாம்பு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

*

செட்டில்மெண்ட்–2

செட்டில்மெண்ட்–2

செட்டில்மெண்ட் பத்திரம் Settlement Deed

செட்டில்மெண்ட் என்னும் குடும்ப உறவுகளுக்குள் கொடுக்கும் தானப் பத்திரத்தை எழுதிக் கொள்ளும்போது, இதன் சட்ட விபரங்களை சரியாகத் தெரிந்து கொள்ளாமல், ஏனோ-தானோ என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளதால், மிக அதிகமானவர்கள் சிரமப்படுகிறார்கள். இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தில் நிறைய சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மிக அதிகமான செட்டில்மெண்ட் பத்திரங்கள் கோர்ட்டுக்கு சென்றுள்ளன. இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதும்போது கவனமாக சில சட்ட விஷயங்களைத் தெரிந்து எழுதினால் இத்தகைய சட்ட சிக்கல்கள் வராது.

தானம் என்பது ஒரு பொருளை மற்றவருக்கு ஓசியாக கொடுப்பது. அவ்வாறு கொடுத்தால், அதை மற்றவர் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த பொருளைக் கொடுப்பவருக்கு அதைக் “கொடுக்கும் உரிமை” இருக்க வேண்டும், அதற்குறிய வயது இருக்க வேண்டும். கொடுக்கும் எண்ணம் இருக்க வேண்டும். பெறுபவர் பெற்றுக் கொண்டால்தான் அந்த தானம் பூர்த்தி அடையும். “நீ சென்னை மாநகரை எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் போதாது. அதை பெறுபவர் எடுத்துக் கொண்டால்தான் அது தானம் எனப்படும். கொடுப்பவருக்கு சென்னையை கொடுக்கும் உரிமை இருக்கிறதா என்பதைப் பொறுத்தே அந்த தானம் செல்லுமா செல்லாதா என்பது முடிவாகும்.

எல்லா மதத்திலும், சொத்தை, செட்டில்மெண்ட் செய்யும் பொதுவான முறை உள்ளது. முகமதிய மதத்துக்கு மட்டும் சில மாறுபாடான விதிமுறைகள் உள்ளன. இந்திய சொத்துரிமைச் சட்டத்தில் “தானம் கொடுக்கும் சொத்துக்களைப்பற்றி” தனியாகவே ஒரு அத்தியாயமே சொல்லப்பட்டிருக்கிறது. அது முகமதியர்களுக்கு மட்டும் பொருந்தாது என்ற விதிவிலக்கும் சொல்லப் பட்டிருக்கிறது.

பொதுவாக, செட்டில்மெண்ட் செய்து வைக்க விரும்புபவருக்கு ஒரு சொத்து இருந்து, அதை தன் மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகள் இவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்து வைக்க விரும்பினால், அதை முழுவதுமாகக் கொடுத்துவிடுவே மிகச் சிறந்த செட்டில்மெண்ட் முறை. கொடுப்பவர், அன்றே, அந்த சொத்தில் அவரின் உரிமை அனைத்தையும் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். இந்த மாதிரி செட்டில்மெண்ட் சட்ட பிரச்சனைகள் ஏதும் எழாது. கொடுத்தவர் மேஜர் வயது அடைந்தவர் என்றும், நல்ல மனநிலையில் எழுதிக் கொடுத்தார் என்றும், யாருடைய கட்டாயமோ, மிரட்டலோ இல்லை என்றும் தெரிந்தால் போதும். அந்த செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லும்.

இவ்வாறு இல்லாமல், ஒரு சிலர், சொத்தை தன் வாரிசுகளுக்கே தானமாகக் கொடுக்க தயங்கிக் கொண்டு சில வாசங்களையும் சேர்த்து எழுதிக் கொடுப்பர். அதாவது, என் ஆயுள் உள்ளவரை நான் இந்த சொத்தில் குடியிருந்து வருவேன் என்றும், என் ஆயுள் காலத்துக்குப் பின், நீ முழுவதுமாக எடுத்துக் கொள் என்றும், என் வாழ்நாள் வரை இந்த சொத்தை, வேறு யாருக்கும் கிரயம் செய்ய உரிமை இல்லாமல், ஆனாலும் அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொள்ளும் உரிமை மட்டும் வைத்துக் கொண்டு செட்டில்மெண்ட் செய்வர். சிலரோ, இந்த சொத்தை உனக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துவிட்ட போதிலும், அதன் பொஷஷன் என்னும் அனுபவிக்கும் உரிமை என்னிடமே என் உயிர் உள்ளவரை இருக்கும் என்றும் அதற்குப் பின் இந்த சொத்து உனக்குச் சேரும் என்று எழுதுவர். வேறு சிலர், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த பத்திரத்தையும், அதன் தாய் பத்திரத்தையும் அவரே வைத்துக் கொள்வார்.

இப்படி, பல குழப்பமான வாசங்களுடன் ஒரு செட்டில்மெண்ட் எழுதி வைத்துக் கொள்வர். உயில் எழுதுவதுபோல நினைத்துக் கொண்டு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவர். இப்படி எழுதுவதால்தான் சட்ட குழப்பம் அதிகமாகும். ஒரு சொத்தை செட்டில்மெண்டாக கொடுக்க வேண்டும் என்றால் அதை முழுமையாக கொடுத்துவிட வேண்டும். அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தில் கையெழுத்துச் செய்யும்போது அதன் உரிமையை முழுமையாகவே விட்டுவிடவேண்டும். அந்த சொத்தை பெறுபவர் அன்றே முழு உரிமையையும் அடையும்படி கொடுத்து விடவேண்டும். இதுதான் முதல்வகை செட்டில்மெண்ட் ஆகும். இதை “இன்-பிரசண்டி செட்டில்மெண்ட்” (in presenti) என்று சட்டம் சொல்கிறது. அதாவது உரிமையை தள்ளிப் போடாமல் “அன்றே” கொடுத்துவிடுவது. அதாவது கிரயம் வாங்கும் சொத்துக்களைப் போலவே, பணம் கொடுத்தவுடன், எப்படி சொத்து கைக்கு கிடைக்குமோ அதுபோல இருக்கும். இவ்வாறு செட்டில்மெண்ட் மூலம் பெற்ற சொத்துக்களை உடனே அதைப் பெற்றவர் “ஏற்றுக் கொள்ள” வேண்டும். கையால் தூக்கிக் கொடுக்கும் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். அசையாச் சொத்துக்களை எப்படி தூக்கி கொடுக்கமுடியும் என்ற கேள்வி எழும். அந்த சொத்தின் பட்டா, வரி, இவைகளை மாற்றிக் கொண்டு அனுபவிக்க ஆரம்பிப்பதே அந்த சொத்தை பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் ஆகும். அசையாச் சொத்தில் வாடகைதாரர் குடியிருந்தாலும், அந்த வாடகையை வாங்க ஆரம்பித்தால் போதும், இந்த சொத்தை இவர் பெற்றுக் கொண்டார் என்று அர்த்தமாகும்.