பாகப் பிரிவினை-10

பாகப் பிரிவினை-10

இந்து மத சொத்தின் பாகப்பிரிவினையில் இறந்தவரின் மனைவிக்கு பிள்ளைகளைப் போலவே (மகன்கள் மகள்களைப் போலவே) ஒரு பங்குதான் உண்டு; அதாவது மொத்த மூன்று பிள்ளைகள் இருந்தால், அந்த பிள்ளைகள் மூன்றுபேரும் அந்த தாயும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர்கள் ஆவார்கள். இந்த நான்கு பேர்களும் தலைக்கு ஒருபங்கு வீதம் நான்கில் ஒரு பங்கு பெறுவர். அதாவது தாய்க்கு ஒரு பங்கு; அதாவது இறந்த கணவரின் சொத்தில் அவர் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு. ஒருவேளை, ஏழு பிள்ளைகள் இருந்தால், 7+1=8 பேர்கள். அதில் அந்த தாய்க்கு எட்டில் ஒரு பங்கு;

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல் இதுபோல சொல்லப்பட்டுள்ளது. ஆக, இந்து மதம் ஒருவரின் மனைவியை சிறப்பாக மதிக்காமல், பிள்ளைகளுடன் பங்கு பெற்றுக் கொள்ளட்டும் என பிள்ளைகளின் வரிசையில் நிற்க வைத்திருப்பது உண்மையில் கொடுமையே! கணவனின் சொத்தில் மனைவிக்கு ஒரு பெரும் பங்கை கொடுத்திருக்கலாம். செய்யவில்லை அந்தச் சட்டம்.

1956க்கு முன் இதுகூட இல்லை; 1956-க்கு முன்னர், இறந்தவரின் சொத்தில் மகள்களுக்கு பங்கே இல்லை. விதவை மனைவி மட்டும் மகன்களுடன் சேர்ந்து பங்கு பிரித்துக் கொள்ளும்போது, மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோருடன், அவளின் கணவனுக்கும் (இறந்த கணவனுக்குத்தான்) ஒரு பங்கு ஒதுக்கி, அந்த கணவனின் பங்கை (அவர் இறந்ததால்) அவரின் விதவை மனைவி பெற்றுக் கொள்வார். அந்தப் பங்கைக்கூட அந்த விதவை மனைவி முழுஉரிமையுடன் அனுபவிக்க முடியாதாம். விதவையின் ஆயுட்காலம்வரை அதில் வரும் வருமானங்களை அடைந்து அனுபவித்து வந்து, (கிரயம் செய்ய உரிமையில்லை; அப்படியே கிரயம் செய்தாலும், விதவையின் ஆயுட்காலம்வரை தான் அந்தக் கிரயமும் செல்லும். அவரின் இறப்புக்குப்பின்னர், அந்த பங்கு மறுபடியும் மகன்களுக்கே சரிசமமாகப் போகும். பெண்களுக்கு சொத்தில் ஒருசிறு அளவு உரிமை கொடுப்பதற்கே வழியில்லாமல் இருந்தது;

பின்னர், சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் ஒரு புது சட்டம் வருகிறது; அது The Hindu Succession Act 1956 என்று பெயர்; அதில் பூர்வீகச் சொத்துக்களாக இருந்தால், அதில் பெண்களுக்கு ஒரு குழப்பமான சிறிய உரிமையை கொடுத்து விட்டு, மீதியை ஆண்களுக்கு கொடுத்து விட்டனர். இறந்த கணவனுக்கு கிடைக்கும் பங்கில், மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், இறப்பதற்கு முன்னரே அவருக்கும் அவரின் மகன்களுக்கும் ஒரு பாகப்பிரிவினையை கற்பனையாக நடத்தி அதில் இறக்கும் தகப்பனார், மகன்கள், தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம்; பின்னர், இறக்கும் தகப்பனாரின் அந்த ஒரு பங்கில், மறுபடியும் எல்லா மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பிரித்துக் கொள்வார்களாம். இதிலும் கொடுமை என்னவென்றால், இறந்தவரின் மனைவிக்கு ஒரு சிறு பங்குதான் கிடைக்கும்; மகன்களுக்கு அதிக பங்கு கிடைக்கும்; இங்கும் மனைவிக்கு கொடுமையே நடந்திருக்கிறது;

1988ல், பின்நாளில் இதை தெரிந்து கொண்ட மகாராஷ்டிர மாநில அரசு, பழைய ஆந்திரபிரதேச அரசு, தமிழ்நாடு அரசு இவை மூன்றும், பெண்களுக்கும் (மகள்களுக்கும்) மகன்களைப்போலவே சரி சமமான பங்கை கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு திருத்தல் சட்டத்தை கொண்டு வந்து அதன்படி பங்கு பெற உரிமையை அளித்தது; அதன்படி அந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, திருமணம் ஆகாமல், பிறந்தவீட்டில் இருக்கும் பெண்களுக்கு (மகள்களுக்கு) மட்டும் இது பொருந்தும் எனவும், அதற்கு முன், அதாவது இந்த சட்டம் வருவதற்கு முன், திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற மகள்களுக்கு அவ்வாறு கேட்க உரிமையில்லை என்றும் அந்த சட்டம் விளக்கி இருந்தது;

இதுவும் ஓரளவே சரியான சட்டம்; இதுவும் குறையுடைய சட்டமே! எனவே மத்திய அரசு 2005ல் ஒரு திருத்த சட்டத்தை கொண்டு வந்தது, அதன்படி, பூர்வீகச் சொத்தில், மகன்களுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கிறோமோ அதேபோலவே மகள்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்து அதுவே இப்போது நடைமுறையில் உள்ளது; அதில், அந்த பெண், திருமணம் ஆகி கணவன் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருந்தாலும், சரிபங்கு பெற அந்த பெண்ணுக்கு உரிமையுண்டு எனவும் விளக்கி இருக்கிறது.

இப்போதுள்ள சட்டப்படி, மகள்களுக்கு சம உரிமை கொடுத்திருக்கிறார்கள்; ஆனாலும், கணவனின் சொத்தில் மனைவிக்கு சிறப்பான உரிமை கொடுக்கவில்லை என்பது ஒரு பெரும் குறையே! மகன்களைப் போலவும், மகள்களைப் போலவும், மனைவியும் ஒரு பங்கு பெறுவாராம்!

மகனும் மகளும் மனைவியும் ஒன்று என்றும், பிள்ளைகளைப் போல தாயையும் (இறந்தவரின் மனைவியையும்) ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது, இந்து மதச் சட்டத்தின் ஒரு குறையாகவே கருதவேண்டியுள்ளது.

கிறிஸ்தவ மதச் சட்டம்

கிறிஸ்தவ மதச் சட்டமான இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925ன்படி, கணவன் இறந்தால், மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிள்ளைகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இது ஓரளவுக்கு பரவாயில்லை. இந்து சட்டத்தைக் காட்டிலும், ஒருபடி மேல்; மனைவிக்கு ஒரு சிறப்பு மரியாதை கொடுத்திருக்கிறது.

முஸ்லீம் சட்டம்

ஷரியத் என்னும் முகமதியர் சட்டத்தில், பிள்ளைகள் இருக்கும்போது, மனைவிக்கு எட்டில் ஒரு பங்குதான்; பிள்ளைகள் இல்லாவிட்டால்தான் நான்கில் ஒரு பங்கு உரிமையுண்டு; அதேபோல, மனைவியின் சொத்தில் கணவனுக்கு (பிள்ளைகள் இருக்கும்போது) நான்கில் ஒரு பங்கு பெற உரிமையுண்டு;

இங்கு மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு என்பது, மனைவிக்கு முக்கியத்துவம் இல்லாததுபோலவே இருக்கிறது; காரணம் தெரியவில்லை; புனிதநூலான குரானிலிருந்து இந்த பங்குவிபரம் சொல்லப்பட்டுள்ளதால், இதன் காரணம் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரியும்.

இவை எல்லாவற்றிலிருந்தும் தெரியவருவது ஒருவிஷயம் மட்டும்தான்; மனைவிக்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்து இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில், டைவோர்ஸ் பெறும் மனைவிக்கு, கணவனின் சொத்தில் பாதி பங்கு கொடுக்க சட்டம் உள்ளது; அதைப் போலவே இந்தியாவிலும் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இறந்த கணவனின் சொத்தில் ஒரு சிறு பங்குதான் மனைவிக்கு கிடைக்கிறது என்பது வருத்தமே!!!

Advertisements

பாகப் பிரிவினை-9

பாகப் பிரிவினை-9

கோர்ட் மூலமாக வழக்குப் போட்டு பாகப் பிரிவினை செய்து கொள்ளலாம். பங்குதாரர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்குள் சமாதானமாக சொத்தை பாகம் பிரித்து பத்திரம் எழுதிக் கொள்ள முடியாவிட்டால், அல்லது ஒரு பங்குதாரர் அல்லது பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள உடன்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அவ்வாறு கொடுக்க மறுப்பவர்மீது கோர்ட்டில் வழக்குப் போடலாம்.

அதற்குமுன், “எனக்கு பங்கு வேண்டும்; பிரித்துக் கொடுக்கவும்” என்று  அவருக்கு கடிதம் அனுப்பலாம்; இல்லையென்றால், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்; அதற்கும் உடன்படாமல், பங்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால், அவர்மீது பாக வழக்கு தொடுக்கலாம்.

சொத்தில் நாம் குடியிருக்கவில்லை என்றாலும், பத்திரம் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், நமக்கு அதில் வாரிசு முறைப்படி பங்கு இருக்கிறது என்பது உறுதியானால், வழக்கு தொடுக்கலாம்; நாமும் கூட்டுப் பங்குதாரர்தான்; எனவே நாம் பங்கு கேட்கும் பாகத்துக்கு எவ்வளவு பங்கு என்று குறிப்பிட்டு அதற்குறிய கோர்ட் கட்டணத்தை செலுத்தி (மிகக் குறைவான கட்டணம்தான்) வழக்கை தொடுக்கலாம்.

நமக்கு, அந்த சொத்தில் உரிமையே இல்லை என்றும் ஏற்கனவே ஒரு பங்குதாரர் சொத்தை அடைந்து கொண்டார் என்று இருந்தால், பங்கு கேட்பவர் அவர் கேட்கும் பங்குக்கு உரிய சொத்தின் மார்கெட் மதிப்புக்கு அதிக கோர்ட் கட்டணம் செலுத்தி பாக வழக்கில் பங்கும், சொத்தின் சுவாதீனமும் கேட்கலாம்.

பாகவழக்கு போட்டவுடன், எதிர் பார்ட்டிகளான மற்ற பங்குதாரர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்படும். அதை வாங்கிக் கொண்டு அவர் கோர்ட்டுக்கு வரவேண்டும், அவரோ, அவரது வக்கீலோ ஆஜராகி, அவரின் நியாயத்தை எழுத்து மூலமாக சொல்ல வேண்டும்,. பின்னர் சாட்சிகள் விசாரனை நடக்கும், வக்கீல் வாதம் நடக்கும். பின்னர் நீதிபதி தீர்ப்பு சொல்வார்.

பொதுவாக பாக வழக்குகளில் இரண்டு தடவை தீர்ப்பு (Decree) சொல்லப்படும். அதை Preliminary Decree and Final Decreeமுதல்நிலை தீர்ப்பானை, கடைசி தீர்ப்பானை என இரண்டு தீர்ப்புகள் வேறு வேறு காலக்கட்டங்களில் சொல்லப்படும். முதல் தீர்ப்பில், எவ்வளவு பங்கு பெற உரிமையுண்டு அல்லது பங்குபெற உரிமையில்லையா என்பதை தீர்ப்பாக சொல்லப்படும்; பின்னர் அடுத்த தீர்ப்பில் அந்த பங்கை பிரித்து நீள அகலத்துடன் வரைபடத்துடன் பங்கு கேட்டவர்களுக்கு தனித்தனியே ஒப்படைத்து பத்திரத்தில் எழுதி முடிவான தீர்ப்பாக கோர்ட் கொடுக்கும்.

அந்த பத்திரத்தில் எழுதிய தீர்ப்பை பெற்றவர்கள் நேரடியாக பத்திர பதிவு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே வைத்துக் கொண்டு தனிதனியே அனுபவித்தும் வரலாம்;

ஒரேவேளை, வழக்குப் போட்ட சொத்தை தனிதனி துண்டு பாகங்களாக பிரிக்க முடியாவிட்டால், அதை கோர்ட் உறுதி செய்து கொண்டு, அந்த பிரிக்கு முடியாத சொத்தை கோர்ட் ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும். அந்த ஏலத்தில் பங்குதாரர்களும் கலந்து கொள்ளலாம், வெளியாட்களும் கலந்து கொள்ளலாம்; அந்த ஏலத்தில் யார் அதிக விலைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த சொத்தை கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுப்பார் நீதிபதி. அதில் கிடைக்கும் பணத்தை, அந்த சொத்தின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

வழக்கு போட்டதிலிருந்து, கடைசி தீர்ப்பு வந்து, சொத்தினை பங்கு பிரித்து கொடுப்பது அல்லது ஏலவிற்பனை செய்து பணத்தை பங்கு பிரித்துக் கொடுப்பதுவரை உள்ள செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான சட்டங்கள் உள்ளன. அதை நீதிபதி பின்பற்றி மிகச் சரியாக செய்துமுடிப்பார்.

அதில் குறைகள் ஏதேனும் இருப்பின் அப்பீல் என்னும் மேல்முறையீடும் செய்து கொள்ள வழியுண்டு.

பாகப் பிரிவினை-8

பாகப் பிரிவினை-8

முகமதிய ஷரியத் சட்டம் 1937:

இதன்படி, முகமதியர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள், கீழ்கண்டபடி சொத்துக்கு வாரிசுகள் ஆவார்கள்.

கணவன், மனைவி, தகப்பனார்,. பாட்டனார், தாயார், பாட்டி, மகள், மகனின் மகள், சகோதரி இவர்கள் இறந்தவரின் சொத்துக்கு “பங்குதாரர்” ஆவார்கள்.

இறந்தவருக்கு ஆண்வழி உறவுகள் அனைவரும் “மிச்சத்தை பெறுபவர்கள்” Residuaries  ஆவார்கள்.

(1)   பிள்ளைகள் இருந்தால், இறந்த கணவனின் சொத்தில், மனைவிக்கு எட்டில் ஒரு பங்கை பெறுவார். ஆனால், அதேபோல, பிள்ளைகள் இருந்தால், இறந்த மனைவி சொத்தில்,  கணவனுக்கு நான்கில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும், மீதி உள்ளதைத்தான் பிள்ளைகள் பங்காக எடுக்க முடியும்.

(2)   இறந்தவருக்கு குழந்தைகள் இல்லையென்றால், (1) இறந்த கணவன் சொத்தில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு; (2) ஆனால், இறந்த மனைவி சொத்தில் கணவனுக்கு பாதி பங்கு அதாவது இரண்டில் ஒரு பங்கு.) (3) தாயாருக்கு மூன்றில் ஒரு பங்கு; தகப்பனாருக்கு ஆறில் ஒரு பங்கு; தாத்தா, பாட்டிகளுக்கு ஆறில் ஒரு பங்கு;

(3)   மகள்களுக்கு – (1) தன் சகோதரனுடன் பங்கு பெறும்போது, சகோதரன்களுக்கு தலா இரண்டு பங்கு வீதமும், சகோதரிக்கு ஒரு பங்கு வீதமும். (2) சகோதரன் இல்லையென்றால், ஒரே மகளாக இருந்தால் இரண்டில் ஒரு பங்கும், பல மகள்கள் இருந்தால் அனைவருக்கும் மூன்றில் இரண்டு பங்கும்;

(4)   இப்படியாக ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மிகக் கவனமாக பங்கு கணக்கை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே சரியாக பங்கை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

மிகச் சுலபமாக தெரிந்துகொள்ள;

கணவன் இறந்துவிட்டால், கணவனின் சொத்தில் மனைவிக்கு எட்டில் ஒருபங்கும், மீதி சொத்து பிள்ளைகளுக்கும் சேரவேண்டும். (அதில் மீதி உள்ளதை, ஆண்கள் (மகன்கள்) இரண்டு பங்குகள் வீதமும், பெண்கள் (மகள்கள்) ஒரு பங்கு வீதமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஷரியத் சட்டம் என்னும் முஸ்லீம் சட்டம் விளக்குகிறது.

மனைவி இறந்தால், மனைவியின் சொத்தில், கணவனுக்கு நான்கில் ஒரு பங்கும், மீதி உள்ளது பிள்ளைகளுக்கு மேற்சொன்னபடி, மகன்களுக்கு தலா இரண்டு பங்கும், மகள்களுக்கு தலா ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.

இந்த பங்கீட்டு விபரம் சரியாக கணக்குப் போடத் தெரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும்.

பாகப் பிரிவினை-7

பாகப் பிரிவினை-7

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் (ஆணோ, பெண்ணோ) இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அவரின் சொத்தை கீழ்கண்ட வாரிசுக் கணக்குப்படி சொத்தைப் பிரித்துக் கொள்வார்கள்.

இறந்தவர் கிறிஸ்தவ ஆணாக இருந்தால், அவரின் மனைவி, இறந்த கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பாகம் பெறுவார். அவரின் குழந்தைகள் (மகன்களும் மகள்களும்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை எத்தனை மகன், மகள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சரிசமமாக பங்கிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல, இறந்தவர் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தால், அவரின் கணவர், இறந்த மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை அவளின் குழந்தைகள் சரிசமமாக பகிர்ந்து கொள்வார்கள்.

இறந்தவருக்கு (கணவனோ, மனைவியோ) பிள்ளைகள் ஏதும் இல்லையென்றால், அவரின் மனைவி/அல்லது கணவர் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு மீதியை அவரின் தகப்பனாருக்கு கொடுக்க வேண்டும்.

தகப்பனாரும் இல்லையென்றால், அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ளலாம்.

பாகப் பிரிவினை-6

பாகப் பிரிவினை-6

குடும்ப பாகப் பிரிவினைகளில், சொத்தானது, வாரிசு முறைப்படிதான் கிடைத்திருக்கும். நமக்கு கிடைத்த அந்த சொத்து நம் முன்னோர்கள் மூலம் கிடைத்த சொத்து. அதை நாம் சம்பாதித்து வாங்கவில்லை. எனவே அது வாரிசு முறைப்படி கிடைக்கும். இறந்தவருக்கு யார் யார் வாரிசுகள் என்பதிலும், எந்தெந்த வாரிசு எவ்வளவு பங்கை அடைய முடியும் என்பதிலும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தையும், மத கோட்பாட்டையும் வைத்துள்ளது. இந்து மதத்துக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956”ம், கிறிஸ்தவ மதத்துக்கு “இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925”ம், முஸ்லீம் மதத்துக்கு “ஷரியத் சட்டம் 1937”ம், பார்சி மதத்துக்கு “இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் ஒரு பகுதியும்” என ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு தனி வாரிசு சட்டமே உள்ளது.

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 (திருத்தம் 2005ல்):

இந்த சட்டமானது இந்துக்களுக்கு மட்டும் பொருந்தும். “இந்து” யார் என்பதை இந்திய அரசியல் சாசன சட்டம் 1950ன் ஆர்ட்டிகிள் 25(2)(பி) விளக்குகிறது. “இந்து மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், (ஜெயின்கள்), புத்த மதத்தவர்கள், இவர்கள் எல்லோருமே “இந்து” என்ற மதத்தில் அடங்குவர். இவர்களுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956”ல் சொல்லப்பட்டுள்ள சட்டங்கள் பொருந்தும். வேறுசிலரும் இந்து மதம் என்கிறது சட்டம், அதாவது, ஒருவர் “கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ, யூதராகவோ” இல்லாமல், அதாவது அந்த மூன்று மதத்தையும் சாராமல் வேறு ஏதாவது ஒரு கொள்கையில் இருந்தால், அவரையும் பொதுவாக இந்து என்று ஏற்றுக் கொண்டு, அவருக்கு இந்த “இந்து வாரிசுரிமை சட்டத்தை” உபயோகிக்கலாம் என்கிறது சட்டம்.

இந்துமதச் சட்டப்படி, “ஒரு இந்து ஆண்” அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அந்த சொத்தை அடைவார்கள். இந்து மதச் சட்டத்தில், வாரிசுகள் என்பவர்கள் (1) முதல் வாரிசுகள், (2) இரண்டாம் வாரிசுகள் (3) பங்காளி உறவுகள் என பல வகைகள் உண்டு.

இந்து ஆணின் முதல் வாரிசுகள்:

ஆணின் முதல்வாரிசுகள்: அவரின் தாய், மனைவி, மகன், மகள், இறந்த மகனின் விதவை மனைவி, இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின் குழந்தை, இறந்த மகனின் இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின் இறந்த மகனின் குழந்தை இவர்கள் மட்டுமே முதல் வாரிசாக வருவார்கள். (இவர்களில், இறந்தவரின் தந்தை, முதல் வாரிசாக வரவில்லை என்பது ஆச்சரியமே!).

இந்து ஆணின் இரண்டாம் வாரிசுகள்;

முதல் வாரிசுகளில் யாருமே உயிருடன் இல்லையென்றால், இரண்டாம் வாரிசுகள், அவரின் சொத்தை அடையலாம். இரண்டாம் வாரிசு வேறு யாருமல்ல, தகப்பனார் மட்டுமே. முதல் வாரிசுகள் இல்லையென்றால், தகப்பனார் அவரின் இறந்த மகனின் சொத்தை முழுவதுமாக அடையலாம்.

இரண்டாவது வாரிசுகளில், தகப்பனாரும் இல்லையென்றால், இறந்தவரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் எல்லோரும் சமமாக அடையலாம். (ஆனால், அவர்கள் அப்போது உயிருடன் இருக்க வேண்டும்; ஏற்கனவே இறந்த சகோதர சகோதரிகள் பங்கு பெறமுடியாது).

சரி, சகோதர சகோதரிகள் யாருமே அப்போது உயிருடன் இல்லையென்றால், அவர்களின் மகன்கள், மகள்கள் (அதாவது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள்) வாரிசாக அந்த சொத்தை அடையலாம். இப்படியாக இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்து பெண்ணின் வாரிசுகள் யார்?

இந்து  பெண் ஒருவர், அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், கீழ்கண்ட முறைப்படி வாரிசுகள் அடைவார்கள்.

(1)   அந்த பெண்ணின் மகன்கள், மகள்கள், (முன்னரேஇறந்த மகனின் குழந்தைகள், முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்) மற்றும் அவரின் கணவர் – இவர்கள் மட்டும் சொத்தை அடைவார்கள்.

(2)   இவர்கள் யாரும் இல்லையென்றால், அவரின் கணவனின் வாரிசுகள் அடைவார்கள்;

(3)   கணவனின் வாரிசுகளும் இல்லையென்றால், அவளின் தகப்பனாரின் வாரிசுகள் அடைவார்கள்; தகப்பனார் வாரிசுகளும் இல்லாவிட்டால், அவளின் தாயாரின் வாரிசுகள் அடைவார்கள்.

(4)   மேலும் ஒரு சிக்கல் இதில் உள்ளது; ஒருவேளை அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால், கணவன் மட்டுமே வாரிசா அல்லது வேறு யாரும் வாரிசா என்ற கேள்வியும் எழும்.

(5)   அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால், அவள் இறக்கும்போது அவள் விட்டுச் செல்லும் சொத்தானது அவள் சம்பாதித்த சொத்தாக இருந்தாலும், அல்லது அவளின் கணவன் வழியில் வாரிசு முறையில் கிடைத்திருந்தாலும், அந்த சொத்து அவளின் இறந்த கணவனின் வாரிசுகளை சென்று அடையும்.

(6)   இந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், அவளின் சொத்து அவளின் தகப்பனார் வழியில் வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அந்த சொத்து மட்டும் அவளின் தகப்பனார் வழி வாரிசுகளையே திரும்பச் சென்று அடையும்; அவளின் கணவன் வாரிசுகளை சென்று அடையாது. (குழந்தை இல்லாதபோது மட்டும் இந்த வாரிசுக் குழப்பத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்).

பாகப்பிரிவினை-5

பாகப்பிரிவினை-5

கூட்டு குடும்ப சொத்துக்களை தனி உரிமையாகப் பிரித்துக்கொள்ள விரும்பினால், பாகப் பிரிவினைப் பத்திரங்களை எழுதிப் பிரித்துக் கொள்ளலாம். பாகப் பத்திரங்களுக்கு முத்திரைத் தீர்வை என்னும் ஸ்டாம்ப் கட்டணமும் (ஸ்டாம்ப் பேப்பராக), அது இல்லாமல், பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதில் தமிழ்நாடு அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி –

(1)   முதல்வகை பாகப் பிரிவினைப் பத்திரம்::-  பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது பூர்வீகச் சொத்தாக இருந்தாலும், அல்லது நம் தகப்பனார், தாயார் போன்ற முன்னோர்கள் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும், (அவர்கள் இறந்தபின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்) அந்த பூர்வீகச் சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும். அவ்வாறு ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம் பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப் பட்டுள்ளது. அதாவது சொத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ.25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.

“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது ‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும்தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்புமகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி” ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். (இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள். (சட்டத்தை அவ்வாறு வைத்துள்ளார்கள், என்ன செய்வது! உடன்பிறந்த சகோதரன், சகோதரியைக் கூட குடும்ப உறுப்பினர் இல்லை என்று வைத்திருந்து, வெகுகாலம் கழித்து, இப்போதுதான், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான், அவர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான் என மத்திய அரசு முத்திரைச் சட்டத்தை திருத்தியுள்ளது).

(2)   இரண்டாம் வகை பாகப் பிரிவினையானது ‘குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு, நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும். இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டுவிட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.) பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

இந்த பாகப் பிரிவினைகளில், எல்லாப் பங்குகளும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒருவருக்கு அதிகபங்கும் மற்றவருக்கு குறைந்த பங்கும் ஒதுக்கிக் கொள்ளலாம். அவரவர் விருப்பம்தான். அதற்கான காரணத்தை விளக்கிவிட்டால் பின்னாளில் பிரச்சனை இருக்காது.

சரிசமமாக பிரித்துக் கொள்கிறோம் என்று சொல்லி ஒரு சொத்தை பல பங்குகளாக பிரித்துக் கொண்டு, பின்னர் ஒருவருக்கு மதிப்பு குறைவான சொத்து கிடைத்திருந்தால் அவர் அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்று, அந்த பாகப் பிரிவினையே செல்லாது, சொத்தை நியாயமாகப் பிரிக்கவில்லை என்றும் கோர்ட் டிகிரி வாங்க முடியும்.

பாகப்பிரிவினை-4

பாகப்பிரிவினை-4

சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும்போது, யார் விட்டுக் கொடுக்க வேண்டும். மூத்தவரா, இல்லை இளையவரா? விட்டுக் கொடுப்பது என்பது பொதுவானது. இதில் மூத்தவர், இளையவர் என்ற வித்தியாசம் இல்லை. இவர் விட்டுக் கொடுத்தால், அவரும் விட்டுக் கொடுப்பார். இவர் இறுக்கிப்பிடித்தால், அவரும் இறுக்கிப்பிடிப்பார். ஆனாலும், ஒன்று கோழி முந்தி இருக்க வேண்டும் அல்லது முட்டை முந்தி இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று முந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான விட்டுக் கொடுப்பது நிகழும். அது ஆள்மனதிலிருந்து வருவது.

இதில், வலுத்தவன் விட்டுக் கொடுக்கலாம் என்பது பெரியோர்களின் யோசனை. இளைத்தவன் விட்டுக் கொடுப்பது நியாமில்லைதான். யார் வலுத்தவன், யார் இளைத்தவன் என்பது பணத்தை வைத்து முடிவு செய்யும் காலம் இது. ஆனால் முன் காலங்களில், இதை “மூத்தவன் வலுத்தவனாகவும், இளையவன் இளைத்தவனாகவும்” கருதி இருந்தனர். இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொடுத்தனர்.

ஒரு சொத்தை (நிலத்தை) இரண்டு முறையில் துண்டுகளாக பங்கு பிரிக்கலாம். ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக் கொடுக்கலாம்; அல்லது வடக்கிலிருந்து தெற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக் கொடுக்கலாம். இந்த இரண்டு வழிமுறைதவிர, சொத்தை துண்டுகளாக பிரிக்க வேறு வழிமுறைகளே இல்லை. அவ்வாறு முடியாது என்றால், மொத்த சொத்தையும் விற்று, பணத்தை பிரித்துக் கொள்ளலாம். அதுவே கடைசி வழி.

இவ்வாறு சொத்தை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கமாக பிரித்துக் கொண்டு வரும்போது, எந்தப்பங்கை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் வரலாம் என்பதாலேயே, நம் முன்னோர்கள் ஒரு சரியான யோசனையையும் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி பிரித்துக் கொடுப்பது மிக மிக எளிது. அதில் சண்டை வராது. எனக்கு இந்தப் பக்கத்து சொத்துத்தான் வேண்டும் என்ற அடாவடித்தனமும் இருக்காது. ஏனென்றால் இதுவே உலக நியதி என்று எல்லா மக்களும் ஒப்புக்கொண்ட வழிமுறை இது. மிக அதிகமானவர்கள் இந்த வழிமுறைப் பற்றி இதுநாள்வரை தெரியாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம், ஆனால், இதை மீறி ஒரு புதுவழிமுறையை ஏற்படுத்தவே முடியாது. அதற்கும் ஒரு தடை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் நம் முன்னோர். அதாவது, இந்த வழிமுறைக்கு மாறாக சொத்தின் பங்கை மாற்றி எடுத்துக் கொண்டால், அது சாஸ்திரப்படி மகா தவறு என்றும், அந்த சொத்தை நிம்மதியாக அனுபவிக்கவே முடியாது என்றும், காலம் காலமாக ஒரு சாபக்கேடும் உண்டு என்றும் சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மைதான் என்றும் அதை நடைமுறையில் கண்டுள்ளதாகவும் இப்போதும் சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படி என்ன வழிமுறை?

ஒரு சொத்தை, பல பங்குகளாக, கிழக்கிலிருந்து மேற்காக பிரித்துக் கொண்டால், கிழக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ, தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், மேற்கு கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் கிழக்கிலும், மூத்தவர் மேற்கிலும் பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.

அதேபோல், ஒரு சொத்தை, பல பங்குகளாக, வடக்கிலிருந்து தெற்காக பிரித்துக் கொண்டால், வடக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ, தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், தெற்கு கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் வடக்கிலும், மூத்தவர் தெற்கிலும் பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.

இந்தியா என்னும் நாடு வடக்கில் உயரமான மலைகளைக் கொண்டும், தெற்கில் பள்ளமான பகுதியை கொண்டும் உள்ளது. எனவே உயரமான பகுதி இளையவருக்கு போய் சேரட்டும் என்றும் வலுத்தவனான மூத்தவன் பள்ளமான பகுதியான தகுதி குறைவான பகுதியை அடையட்டும் என்று ஏற்பாடாம்.

அதேபோல உலகில் கிழக்கில் சூரியன் உதிக்கிறான், அவன் காலையில் எழும் கிழக்கு திசை வளர்ச்சியை நோக்கி மேலே எழும்பும் திசை. மாலையில் மேற்கில் மறையும் திசையானது கீழே சாயும் திசை. எனவே இளையவனே, சூரியன் உதிக்கும், அல்லது வளரும் அல்லது மேலெழும் திசையில் உள்ள சொத்தை அடையட்டும் என்றும், வலுத்தவனான மூத்தவன் மறையும் திசையான மேற்கை அடையட்டும் என்று வகுத்து வைத்துள்ளனர்.

இளையவனே சலுகைக்கு உரியவன் என்பதே கோட்பாடு. மூத்தவன் விட்டுக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். இளையவன் பெறும் நிலையில் இருக்க வேண்டும். ஆனாலும், இளையவன் இந்த தத்துவத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, “நான் சலுகையைப் பெற்றவன்” என்று நினைத்து எப்போதும் நன்றியுள்ளவனாகவும் இருக்க வேண்டுமாம்.

நூறை மூன்றாக பிரித்தால் 33.33 வரும்; அதிலும் ஒரு பைசா மிச்சமிருக்கும். இந்த மிச்சத்தையும் சேர்த்துப் பெறுபவனே இந்த இளையவன். ஏனென்றால், அவனே மூத்தவர்களின் வாழ்நாள் பாதுகாவலன்.

அதற்காகத்தான், இராமன் நிழலாக லஷ்மணன் இருந்திருக்கிறான். மூத்தவனின் நிழலாக இளையவன் இருப்பானாக!!!

பாகப்பிரிவினை-3

பாகப்பிரிவினை-3

பொதுவாக, கோர்ட்டுக்கு போகாமல், குடும்பச் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வது என்பதே புத்திசாலிதனம். பங்காளிகளான நம்மைக் காட்டிலும் கோர்ட் ஒன்றும் பெரிதல்ல. நம் குடும்பத்துக்கு யோசனை சொல்லும் அளவுக்கு கோர்ட் ஒன்றும் நம் தந்தையோ, பாசமான தாயோ அல்ல. சட்டத்துக்கு ஈவு இரக்கம் இருக்காது. அந்த ஈவு இரக்கத்தை காட்ட வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. ஆனாலும், பாகப் பிரிவினை வழக்குகளின் முடிவில் பங்கை தனித்தனியாக பிரிக்கும்போது EQUITY ஈக்விட்டி என்னும் தர்ம ஞாயத்தை சிறிது கடைப்பிடிக்கும்படி கோர்ட்டுக்கு சலுகையுண்டு. அதன்படி பங்குதாரர்கள் அவர்களுக்குள் கிடைக்கும் பங்கு சொத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவர் செலவில் ஏற்கனவே இருந்த பொது அடமானக் கடனை ஒருவர் மட்டும் பணம் கொடுத்து மீட்டி இருந்தால் அந்த பணத்தை அவர் பெறும் உரிமை உண்டு. ஒருவர் மட்டும் தன் பணத்தை செலவு செய்து வீட்டை கட்டி இருந்தாலோ, அல்லது ஒரு மாடியைக் கட்டி இருந்தாலோ, அதை மற்ற பாகஸ்தர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தால், அதற்குறிய அதிக பங்கை அவர் பெற இந்த ஈக்விட்டி சட்டம் (தர்ம-நியாயச் சட்டம்) வழி கொடுக்கும். அதைக் கொண்டு நீதிபதி அந்த சலுகை தீர்ப்பை வழங்க வழியுண்டு. ஆனால், மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தை பெறாமல் வீட்டையோ, ஒரு மாடியையோ தன் செலவில் கட்டி இருந்தால், அந்த பணத்தை, அல்லது செலவை இந்த ஈக்விட்டி சட்டம் பெற்றுத்தராது. அவ்வாறு வீட்டைக் கட்டியவர், அவர் இஷ்டத்துக்கு, மற்றவரின் சம்மதம் இல்லாமல், செலவு செய்தவர் என்று கைகழுவி விட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில், உண்மையில் ஒருவர் பொதுச் செலவு செய்திருந்தாலும், பொதுவாக மற்ற பாகஸ்தர்கள் வேண்டுமென்றே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருந்தால், அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தே இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனநிலை இப்போதைய காலங்களில் இல்லவேயில்லை!

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். ஆணும் பெண்ணும் சிறுவர்களாக இருக்கும்போது அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்ற உறவுகளில் லயித்து, ஒரே தட்டில் உணவு உண்டு, எச்சில் தின்பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு, ஒரே பாயில் படுத்த உறவுகள்தான் இவர்கள். யாரோ ஒரு வெளியாள் நம் அண்ணன் தம்பி அக்காள் தங்கையை திட்டினாலோ, அடிக்க வந்தாலோ அந்த வெளிநபர் தொலைந்தார். எல்லோருமாகச் சேர்ந்து அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் வீடு வந்து சேருவோம்! கடவுள், தன் படைப்புகளிலேயே, இந்த உறவுகளைப் பார்த்துத்தான் பெருமையை பட்டுக் கொள்வாராம்! எத்தனையோ தங்கைகள் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது, அவளின் தாய் தந்தை அண்ணன் தம்பிகள் கண்கலங்கி நிற்பதை பார்த்திருக்கிறோம். அவ்வளவும் நிஜமே!!!

அந்த நிஜங்கள் எங்கே சென்று ஒளிந்து கொண்டன. குடும்ப சொத்துக்களை பிரிக்கும்போது அவைகள் காணாமல் போய்விட்டனவே!!! எதிரியைக்கூட மன்னிப்பேன், என் அண்ணனை, தம்பியை, சகோதரியை மன்னிக்கவே மாட்டேன் என்று ஆவேசம்!! ஏன்? ஏன்? தெரியவில்லை. “ஐந்து வயதில் அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி” என்று ஒரு பழமொழியை நம் முன்னோர்கள் முன்னரே சொல்லி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், பாசம் என்பது பொய்யா? சொத்து வரும்போது பாசம் அடிபட்டுப் போய்விடுமா? பாசத்தைவிட சொத்து பெரியதுதானா?

மகாபாரதம் என்பது கலியுகம் தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். அதாவது சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. அங்கும் சொத்தில் பங்கு கேட்கின்றனர். கொடுக்கவில்லை. வேண்டாம் என்று போயிருக்கலாம். இந்த சொத்து வந்துதான் (நாடு வந்துதான்) அவர்கள் ஆள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஐவருமே பெரும் வீரர்கள். யுதிர்ஷ்டன் அசுவமேத யாகம் செய்தால் போதும் மகாசக்கரவர்த்தி ஆக முடியும், அர்ச்சுனன் ஒருவனால் மட்டுமே எல்லா மன்னர்களையும் தோற்கடித்து நாட்டை கைப்பற்றமுடியும். ஆனாலும், பங்காளி துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் என்னை ஏமாற்றி பெற்றதாக அவன் நினைக்கக் கூடாது. என் வாழ்வு சிதைந்தாலும் பரவாயில்லை, அவனை சிதைப்பேன். இங்கு இரண்டு கூட்டமுமே அழிகிறது. வெற்றியின் பலன் யாருக்கும் இல்லை. வென்றவரும் தோற்றவரும் அழிவை நோக்கியே பயணித்தனர்………..

பாகப்பிரிவினை -2

பாகப்பிரிவினை -2

பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாகப் பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாத சொத்தாக இருந்தாலோ, ஒரே சொத்தை பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள முடியாமல் இருந்தாலோ, அல்லது அவ்வாறு பிரித்தாலும் அந்தப் பங்கு மிகச் சிறிய பங்காக இருந்து அதை தனியாக அனுபவிக்க முடியாமல் போனாலும், அதை பங்கு பிரித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பங்கு பிரித்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் சொத்தை, NOT DIVISIBLE BY METES AND BOUNDS என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நீள அகலத்துடன் தனித்தனி சொத்தாக (துண்டுகளாக) பிரிக்க முடியாத சொத்து என சொல்கிறது. இவ்வாறான சொத்துக்களை ஒருவரோ, இருவரோ அனுபவித்துக் கொள்ள விட்டுக் கொடுத்து விடலாம். அதற்குறிய பங்கின் பணத்தை மட்டும் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர் விட்டுக் கொடுப்பதை “விடுதலை பத்திரம்” எழுதி பதிவு செய்து கொண்டால் போதுமானது. அதை பாகம் பிரித்துக் கொள்ள தேவையில்லை.

ஒருவேளை, எல்லோருக்கும் அந்த சொத்தில் ஆசை இருக்கிறது என்றால், யார் அந்த சொத்தை எடுத்துக் கொள்வது என்று போட்டி வரும். அதுவும் பங்காளிகள் ஆனபின்னர் இது மிக அதிகமாகவே இருக்கும். இது ஒரு “மனம் சார்ந்த பிரச்சனை.” மற்றவர் நன்றாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருப்போமாம்! நமக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும், நம்மை சுற்றியுள்ளவர் அந்தச் சகுனி பாத்திரத்தை திறம்பட செய்து முடிப்பார்களாம்! அதற்கு எப்படியும் நாம் இரையாகிவிடுவோமாம்! மகாபாரதம் முழுக்க பங்கு பிரிக்கும் சண்டைதானே!!

இந்தப் பிரச்சனை வரும் என்றே, சட்டமும் அதற்குறிய வழிமுறையை சொல்லியுள்ளது. ஒரே சொத்தை பலர் எடுத்துக் கொள்ள விரும்பும்போது, அவர்களுக்குள் ஒரு சமாதானமான முடிவை எடுத்து, அந்தச் சொத்தை ஒருவர் அல்லது இருவர் அடையும்படியும், மற்றவர்களுக்கு ஒரு நியாயமான பணத்தை கொடுத்து விடும்படியும் முடிவெடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதபோது, அல்லது பங்காளிகளுக்குள் பகைமை ஏற்பட்டிருக்கும்போது, இது சாத்தியப்படாது என்பதால், சொத்துக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதைவிட அதிகமாக யார் விலைக்கு வாங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சொத்தை கொடுத்து விடுவது, மற்றவர்கள் பணத்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு நியாயமான முடிவாக இருக்கும் என சட்டம் சொல்கிறது.

இதையும் தாண்டி, சொத்தில் பங்கு வேண்டும், பணம் வேண்டாம். கோடி ரூபாயாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை. இது என் பாட்டன் சொத்து, இது என் அப்பன் சொத்து, இது என்னைப் பெற்ற தாயின் சொத்து, இவர்களின் ஞாபகார்த்தமாக (நினைவாக) ஒருபிடி மண்ணாவது எனக்கு சேர வேண்டும் என உலகிலுள்ள எல்லாத் தத்துவங்களையும் ஒருசேர அரசியல்வாதியைப் போல முழங்குவார்கள். பொதுவாக அதில் ஒரு உண்மையும் இல்லாதபோதிலும், வாதத்திற்காக அதை ஏற்கும் நிலை ஏற்படும். ஆனால் நடைமுறையில் இதற்கு எந்தவிதத்திலும் வழியே இல்லை. எனவே சட்டம் இங்கு நுழைந்து தன் வேலையைச் செய்யும். கோர்ட்டுகளுக்கு வழக்கு போகும். அங்கு அவரவர் பங்கு நிர்ணயம் ஆனபிறகு, சொத்தை “பொது ஏலத்தில்” விற்பனை செய்ய கோர்ட் உத்தரவிடும். அதில் “அப்பன், பாட்டன் சொத்தை வாங்க ஆசைப்படுபவர்களும் கலந்து கொள்ளலாம் என்றும், யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு சொத்தை விற்பனை செய்ய உத்தரவாகும். இப்போது, பட்டான் சொத்தை கோடி கொடுத்து வாங்க முனைப்பு காட்ட மாட்டார்கள். அவர்கள் முன்னர் பேசிய தத்துவம் பொய்யாகிப் போய்விடும்.

பாகப்பிரிவினை: 1

பாகப்பிரிவினை: 1

தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. கூட்டாக வாங்கியிருந்தால்  (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்.