நாள் என் செய்யும்

நாள் என் செய்யும் வினை தான் என்செயும் எனைநாடி வந்த

கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் 

தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே.

 

கார்டியன் முடிச்சு (Gordian Knot)

கார்டியன் முடிச்சு (Gordian Knot)

கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ள கார்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ் என்பவனால் போட்டுவைக்கப்பட்ட முடிச்சாகும்.

கோர்டியஸ் அரசன் ஆவதற்கு முன், அவன் ஒரு சாதாரண குடியானவனாக இருந்தான். ஒருநாள் அவன் தன் மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு முதல்முறையாக ப்ரிகியா நகரத்துக்கு வருகிறான். அவ்வாறு நகரத்துக்குள் நுழையும்போது தெய்வ வாய்மொழிப்படி (அசரீரி வாக்குப்படி) அவனை அந்த நகரத்து மக்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டனர். கோர்டியஸ், தன் நன்றிக் கடனாக, அவனின் மாட்டுவண்டியை சீயஸ் (Zeus) என்ற கடவுளுக்கு அர்பணித்து விட்டான். அப்போது அந்த வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து  அந்த நுகத்தடிக் கயிறால் ஒரு ‘முடிச்சு’ போட்டுவிட்டான். அந்த முடிச்சானது கடும் சிக்கல்கள் கொண்ட ஒரு நூதன முடிச்சு. ‘அந்த முடிச்சை அவிழ்ப்பவர், ஆசியாவுக்கு மகுடாதிபதி ஆவார்’ என்றும் சொல்லிச் சென்றான்.

எவ்வளவோ பேர் அந்த முடிச்சை அவிழ்க்க முனைந்து தோற்றுப் போயினர். வெகுகாலமாக அந்த வண்டி அந்த இடத்திலேயே இருக்கிறது. இருந்தும் அந்த முடிச்சை அவிழ்க்க யாராலும் முடியவில்லை.

அங்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இதனைக் கேள்விப்பட்டு அந்த வண்டியின் முன் வந்து நின்றான். அந்த முடிச்சை நிதானமாகப் பார்த்தான். ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் உடைவாளை உருவி, ஒரே வீச்சில் அந்த முடிச்சை இரண்டாக வெட்டினான். கயிறு சிதறியது.

(குழப்பமான விஷயங்களுக்கு இந்த முடிச்சை உதாரணமாகக்  காட்டி ‘கார்டியன் முடிச்சுப் போன்ற குழப்பம்’ என்பர்.)

Gordian Knot:A knot tied by Gordius, king of Phrygia, held to be capable of being untied only by the future ruler of Asia, and cut by Alexander the Great with his sword. (in 1579)

(நன்றி; திரு அ.முத்துலிங்கம் அவர்களின் வம்சவிருத்தி சிறுகதை)

 

விதியை வெல்லும் பிள்ளையார்

 

புத்தி தத்துவம்

விதியை வெல்லும் பிள்ளையார்:



ஒரு செயல் பலித்துவிடுவதும் (நடந்து விடுவதும்) பலிக்காமல் போவதும் விதி வசத்தால் மட்டுமே.
எனவே ஒரு நல்லசெயல் நடக்காமல் கெடுவதற்கு இரண்டு காரணம். 1. ஊழ் (விதி), 2.புத்தி (சொந்த அறிவு).
ஊழ் வருவதை முன்னரே அவரவர் புத்தியைக் கொண்டு தெளிந்து அதற்குறிய உபாயங்கள் மூலம் அதிலிருந்து விலிகிக் கொள்ள வேண்டும்.
இந்த புத்தி நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்றால், நமக்குள் ஏற்கனவே உள்ள’புத்தி தத்துவத்தால்’ மட்டுமே. இந்த புத்தி தத்துவத்துக்கு அதி தெய்வம் கணேசர் என்னும் பிள்ளையார் என்னும் கணபதி என்னும் விக்னேஷ்வர். இவர் சகல விதமான உயிர்களிடத்திலும் புத்தி தத்துவமாய் விளங்குகிற புத்தி எல்லாவற்றுக்கும் ஆதாரமாய், மூலமாய் விளங்குபவர். இவரை தியானிப்பதால் நமக்கு புத்தி விரிவடைவதும், தேவைப்படும்போது நல்ல உபாயங்கள் தோன்றுவதும் ஆன நல்ல  விளைவுகளை ஏற்படுத்துவார். இந்த புத்தி தத்துவம் இல்லாமல் ஒரு செயலையும் செய்ய முடியாது. நாம் எடுத்த காரியங்கள் முடிவுக்க வர வேண்டும் என்றால் இந்த புத்தி தத்துவம் நமக்குத் தேவை.
புத்தி தத்துவத்தை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையை மிகுந்த ஞாபக சக்திக்கு உதாரணமாக்குவர். யானையானது ‘கண்டது, கேட்டது, உற்றது,உணர்ந்தது, ஆகிய நான்கையும் ஒரு சிறிது கூட,எவ்வளவு காலம் ஆனாலும் மறக்காமல் நினைவில் கொள்ளும். இது எவ்வளவு வலிமை உடையதாகவும்,பருத்த உடல் கொண்டதாகவும் இருந்தாலும், பழகியவருக்கு யானை ஒரு சிறு ஆட்டிக் குட்டிதான்.
எண்ணம் வேறு, புத்தி வேறு. சித்தி=சித்தம்/எண்ணம். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும், எண்ணம் சிதறும்போது அல்லது எண்ணம் எவ்வாறு இருந்தபோதிலும், புத்தியைக் கொண்டு ஜெயிக்கலாம்.
சித்தியும்., புத்தியும் பிள்ளையாரின் இரண்டு ஆற்றல்கள்.

தேவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஏதாவது ஒரு இடையூரால் தடையாகி வந்ததால், சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். அவர் தனது முகத்திலிருந்து ஒரு புத்திரனை தோற்றுவித்தார். அதை உமாதேவியார் கண்டு, இவன் யானைத்தலையும், தேவர்களின் கரங்களும், பூதத்தின் உடலும் பெறுக என்றாள். சிவன், அவரை, கணங்களுக்கு தலைவராக இருக்கும்படி அனுப்பினார். 
அவர், தன்னை வழிப்பட்டுத் தொடங்கும் செயல்கள் எல்லாம் இடையூறு ஏற்படாமல் காப்பதாக வாக்களித்தார். கணங்களின் தலைவர் என்பதால் கணபதி ஆனார். விக்கினங்களை (இடையூறுகளை) காப்பவர் விக்னேஷ்வரர். இவரைப் பற்றி வராக புராண வரலாறு விரிவாகக் கூறும். 

நாரதர்

நாரதன்:

நாரதன், இதற்கு முந்திய மகா கற்பத்தில், ‘உருவருகன்’ என்னும் கந்தருவனாக இருந்தார். பின், பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர் செய்த யாகத்துக்கு போய்,அங்கு வந்திருந்த ஒரு கன்னியை வசியம் செய்து அவளைப் புணர்ந்தார். இதை தெரிந்து கொண்ட அந்த பிராமணர், இவரை ஒரு சூத்திரனாக பிறப்பாய் என சபித்து விட்டார். அவ்வாறே இவர் சூத்திரனாப் பிறந்து அந்தப் பிறவியில் மகா-தவம் செய்து வந்தார். அதற்குப் பின்னர் ஏற்பட்ட கற்பத்தில் பிரம மானச புத்திரராகப் பிறந்தார்.

இவர் தக்ஷப் பிரஜாபதி பிள்ளைகள் அனைவருக்கும் ஞான உபதேசம் செய்து, இந்த பிரபஞ்ச சிருஷ்டிக்கு எதிராகச் செயல்பட, அதைக் கண்ட தக்ஷன் கோபம்கொண்டு’நீர் சந்ததி ஏதும் இல்லாமல், நிலையற்றவராக அலைந்து திரிக’ என்று சாபம் கொடுத்தார்.  அதனால்தான் அவர் மூன்று லோகங்களிலும் சஞ்சரித்து திரிவார். 

இவரின் பழக்கமே, யார் எது சொன்னாலும், அதை பிறருக்கு சொல்லிவிடுவார். இவர் வாயில் இரகசியம் ஒன்றும் கிடக்காதாம். இவர் தேவ சபை, இராஜ சபை,வேள்வி சபை இவைகளுக்கு யாரும் அழைக்காமலேயே செல்லும் சுவாதீனம் உடையவர்.

யாராவது தனியாக அகப்பட்டு, திக்கற்றவர்களாக இருந்தால், அங்கு இவர் தோன்றி அவர்களுக்கு தன்னை வெளிக்காட்டி, அவர்களுக்குறிய உபாயங்களையும், (உதவிகளையும்) பின்னர் நிகழப்போகும் விபரங்களை முன்னரே தெரிவித்தும் விடுவாராம்.

யாருக்காவது தூதுவராகப் போனால் அதை திறம்படச் செய்வதில் வல்லவர். பேச்சு சாதுரியம் மிக்கவர். இவர் தரும நூல்களை கற்று சிறந்து விளங்கினவர். வீணை வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு யாருமே மூவுலகிலும் இல்லையாம்.

ஸ்ரீகிருஷ்ணனது அவதாரத்தை, அவன் தோன்றுவதற்கு முன்னரே, கஞ்சனுக்கு உணர்த்தினவர் இவரே.இராமாயணத்தை வான்மீகிக்கு உரைத்தவரும் இவர்தான். இவர் ரிஷிகளில் தேவ ரிஷி வகையைச் சேர்ந்தவர்.சரித்திரங்களில் இவர் சம்மந்தமில்லாதவை மிகக் குறைவே.

நாரதீயம்:பதினெட்டு புராணங்களுள் ஒன்று இந்த நாரதீயம். இது நாரதப் புரோக்தம் எனப்படும். பெரிய கற்ப தர்மங்களை கூறுவது.  இது 25,000 கிரந்தங்களை உடையது. உப புராணங்களுள் இதுவே மிகப் பெரியது.
ராக தாள லட்சணங்களை குறித்து சொல்லும் நாரதர் செய்த நூலுக்கும் நாரதீயம் என்று பெயர்.

 

நவராத்திரி

நவராத்திரி:

ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி) சுக்கில பிரதமை நாள் முதலாக ஒன்பது ராத்திரிகளை ‘நவராத்திரி’ என்பர்.

கிருதயுகத்திலிருந்து இது நடந்துவருகிறதாம். கிருதயுகத்தில் வாழ்ந்த சுகேதன் என்னும் ஓர் அரசன் தனது அரச பதவியை இழந்து தனது மனைவிகளுடன் காட்டுக்குச் சென்றான். அங்கே அங்கிரசன் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து தான் இராச்சியத்தை இழந்ததை வருத்தத்துடன் தெரிவித்தான்.

அந்த ரிஷி, சுகேதன் அரசனுக்கு சில பூஜை முறைகளை சொல்லிக் கொடுத்து உபதேசித்தார். அவர் சொல்லிய அந்த பூஜா முறைகள் நவராத்திரி பூஜை எனப்படும். இந்த பூஜையை பக்தியோடு செய்து வந்தால் தனது இழந்த ராச்சியத்தையும், இழந்த செல்வங்களையும் திரும்பப் பெறலாம் என்று அந்த ரிஷி உபதேசித்து அதை செய்யும் முறையையும் சொல்லிதந்தார்.  அந்த அரசனும் அவ்வாறே செய்து இழந்தவைகளை அனைத்தையும் திரும்பப் பெற்றான்.

அதனால், அரசன் கட்டளைப்படி, அப்போதிலிருந்து வருடந்தோறும் இதை கொண்டாடி வருகின்றனர்.

துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் முறையே ஒருவருக்கு மூன்று நாட்கள் வீதம் மூவருக்கும் ஒன்பது நாட்களும் பூசித்து, ஒன்பதாம் நாள் ஆயுதங்களையும், பூஜை புத்தகங்களையும் ஆராதித்தும், அடுத்த பத்தாவது நாளில் தஜமி திதியை வெற்றிக்காக விஜயதசமியாக கொண்டாடுகின்றனர்.

ரோஹினம்

ரோஹினம்:

இது ஒரு மலை. இந்த மலையில் இரத்திரனங்கள் அதிகமாக உள்ளதாம்.

இது ஒரு மரம் என்றும் சொல்வர். இது அலம்ப தீர்த்தக் கரையில் உள்ளதாம். இதிலே வால்கில்லியர் தலைகீழாக தொங்கி தவம் செய்து வந்தார். கருடன் அவருக்கு அமிர்தம் கொண்டுவருமாறு சென்றது. அது தனக்கு வழியில் பசிக்கும் போது சாப்பிடும் உணவாக ஒரு யானையைக் கொண்டு சென்றது. அந்த யானையை தூக்கிக் கொண்டு முனிவர் தொங்கும் மரத்தில் இளைப்பாற உட்கார்ந்தது. அந்த மரம்  ஒடிந்தது. அந்த மரம் கீழே விழுவதற்கு முன்பே அந்த மரத்தையும் சேர்த்து தூக்கிக் கொண்டு கருடன் பறந்தது. அது அவ்வாறு பறந்து நிஷ்புருஷ மலையில் இறங்கி அந்த யானையை தின்றது.

அவ்வாறு அந்த மரத்தை அங்கு விட்டதால் அந்த மரத்தில் தொங்கிய வாலகில்லியரும் கருடன் சேர்ந்த அந்த மலையில் போய்ச் சேர்ந்து அங்கு அவரின் தவத்தைத தொடர்ந்தார்.

பெருச்சாளி

பெருச்சாளி

பெருச்சாளி–(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

ஒரு ஊரில் ஒரு விவசாயி. அவன் கஷ்டப்பட்டு ஒரு கிழங்குத் தோட்டம் போட்டிருந்தான். அவனுக்கு சனியாக வந்த பெருச்சாளி அவன் கிழங்குகளை எல்லாம் நாசமாக்கி கொண்டு வந்தது. அவனோ பரம ஏழை. ‘அவனா,பெருச்சாளியா’ என்ற அவல நிலை. பாவம் அவன் என்ன செய்வான்?

ஒரு பெருச்சாளிப் பொறி வாங்கி தோட்டத்திலே இடம் பார்த்து மறைவாக வைத்தான். ஆனால், பெருஞ்சாளி பெரிய கை தேர்ந்த பெருச்சாளி. தப்பிக் கொண்டே வந்தது.

ஒரு நாள் அதிகாலையில் பொறி வைத்த இடத்தில் இருந்து பெரிய சத்தம். விவசாயியின் எட்டு வயது மகன் ஓடோடிச் சென்றான் என்னவென்று பார்க்க. பொறியில் பிடிபட்டது ஒரு கருநாகம். முற்றிலும் சாகாத நிலையில் அப்படியும்,இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளியைப் பிடிக்க வைத்த பொறி என்று. கிட்ட வந்த பாம்பை தவறுதலாகப் பிடித்து விட்டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன். பிரண்டு, பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டி கொத்தி விட்டது.

விவசாயியும், அவன் மனைவியும் குய்யோ முறையோ என்று தங்கள் தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள். பாம்பையும் ஒரே அடியில் கொன்று போட்டாகி விட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறந்த சடலத்தை கொண்டு போய் புதைத்தார்கள்.

பன்னிரண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேண்டும். பன்னிரண்டாம் நாள், ஊர் வழக்கப்படி பந்து சனம் எல்லோரையும் கூப்பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு. ஏழை விவசாயிடம் என்ன இருக்கு? வெகுகாலமாக வளர்த்த ஒரே ஒரு ஆடு. அதை வெட்டி எல்லோருக்கும் விருந்து வைத்தான்.

பெருச்சாளியைக் கொல்லத் தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனுடைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பும் செத்தது. அதற்குப் பிறகு அருமையாக வளர்த்த ஆடும் செத்தது.. பெருச்சாளி மட்டும் இன்னும் அவன் வயலில் ஒடிக் கொண்டே இருக்கிறது.
–(நன்றி.  திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)

சதுர்யுகம்

யுகங்கள் நான்கு (சதுர் யுகம்)

1. கிருத யுகம் = 17,28,000

2. திரேத யுகம் = 12,96,000

3. துவாபர யுகம் = 8,64,000

4. கலி யுகம் = 4,32,000

இவை மொத்தம்  43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.

 

ஒரு சதுர் யுகம் (43,20,000 மனித வருடங்கள்) கழிந்தால் பிரம்மனுக்கு ஒரு பகல். அதே கால அளவு ஒரு இரவு. இப்படியாக 360 பகல் இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு வருடம்.

இவ்வாறு நூறு வருடங்கள் சென்றால் பிரம்மாவின் ஆயுள் முடியும்.

இதில் முற்பகுதி 50 வருடம் பாத்தும கற்பம் என்று பெயர். பிற்பகுதி 50 வருடத்திற்கு வராக கற்பம் என்று பெயர்.

இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவுக்கு ஒரு பகலில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். அந்த மனு அந்தரம் ஒன்றில் தேவேந்திரன், சப்தரிஷிகள், முதலியோர் பிறப்பார்கள்.

பிரமாவுக்கு இரவு வரும்போது பிரளயம் உண்டாகும். இந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிட்டு, மகர் உலகத்தில் உள்ளவர் புதிதாகப் பிறப்பார்கள்.

 

நாடி கிரந்தம்

நாடி கிரந்தம் மொத்தம் 15.

இவைகளில் உலகத்திலுள்ள  மனிதர்கள் பெரும்பாலோரின் ஜாதகங்களும் பலன்களும் உள்ளன.

பதினைந்து நாடி கிரந்தங்கள்:

1. சூரிய நாடி

2. சந்திர நாடி

3. குச நாடி

4. புதன் நாடி

5. சுக்கிர நாடி

6. குரு நாடி

7. சாமி நாடி

8. ராகு நாடி

9. கேது நாடி

10. சர்வசங்கிரக நாடி

11. பாப நாடி

12. துருவ நாடி

13. சாவ நாடி

14. சுக நாடி

15. தேவி நாடி

 

திரௌபதி

திரௌபதி

துருபதன் மகள்.

பாண்டவர் மனைவி

பூர்வஜென்மத்தில் நளாயனன் என்னும் ரிஷியின் மகள். இவளுக்கு இந்திரசேனை என்னும் பெயர். இவளை மௌத்கல்லியன் என்னும் ரிஷிக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

அவள் கணவனோ, இவளின் பதிவிரதை தன்மையை சோதிக்க விரும்பி, தானே குஷ்டரோகி ஆகிக் கொண்டான். ஆனாலும் அவளோ எந்தவித வெறுப்பும் காட்டாமல் அவனுடைய தேகத்தை தொட்டு மருந்து போட்டு கவனித்து வந்தாள்.

அவளின் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த கணவன், அவளிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டான். நீர் மிக அழகான வாலிபனாக ஆகி என்னுடன் ஐந்துமுறை கலக்க வேண்டும் என்று கேட்டாள். அவ்வாறே அவனும் செய்தான். அவன் சிறு காலத்தில் இறந்துவிட்டான்.  அவளும் இறந்து விட்டாள்.

இவள், மறு ஜென்மத்தில், காரொசனுக்கு மகளாகப் பிறந்து பசுபதியை நோக்கித் தவம் இருந்தாள். பசுபதி இவள் முன் தோன்றி ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். முன்பிறவியில் கணவனின் ஏக்கத்தில் இருந்தவள், ‘எனக்கு கணவர் வேண்டும்’ என்று கேட்டாள். அதை ‘பதிந்தேகி, பதிந்தேகி’ என்று ஐந்து முறை கேட்டாள். பதி வேண்டும் என்று அர்த்தம். பசுபதியும் அவ்வாறே வரம் அருளினார்.

மறு ஜென்மத்தில் இவள் ஐந்து கணவனைப் பெற்றாள்.

இவள் யாகத்தில் பிறந்ததாள் யாக்கியசேனை என்றும், துருபதன் மகள் என்பதால் திரௌபதி என்றும், பாஞ்சால ராஜன் மகள் என்பதால் பாஞ்சாலி என்றும் பல பெயர்களைப் பெறுவாள். ஆனால் அவளின் தந்தை இட்ட பெயர் ‘கிருஷ்னை’.

திரௌபதி யுதிஷ்டிரனுக்கு பெற்ற மகன் பிரதிவிந்தியன்.

வீமனுக்குப் பெற்ற மகன் சுருதசேனன்,

அர்ச்சுன்னுக்கு பெற்ற மகன் சுருதகீர்த்தி.

நகுலனுக்குப் பெற்ற மகன் சதானீகன்.

சகாதேவனுக்குப் பெற்ற மகன் சுருதகன்மன்.