வில்லிபுத்தூராரின் பாரதம்

வில்லிபுத்தூராரின் பாரதம்:

வில்லிபுத்தூராழ்வாரின் மகன் ‘வரந்தருவான்’ என்றுபெயர்.

இவர் தன் தந்தை வில்லிபுத்தூராழ்வாரிடமே பாடம் கற்றுக் கொண்டு வந்தார். ஒருநாள் தன் தந்தை சொன்ன பொருளை விட்டு வேறு பொருள் உள்ளது என மறுப்புச் சொன்னதால், அவரின் தந்தைக்கு கோபம் வந்து மகனை விரட்டி விட்டார். மகன் வரந்தருவான் வேறு ஊருக்குச் சென்று வேறு ஒரு ஆசிரியரைக் கொண்டு பாடம் கேட்டு வந்தார். தன் தந்தையின் கண்ணில்படாமல் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள், தந்தையான வில்லிபுத்தூராழ்வார் தான் இயற்றிய பாரதத்தை சபையில் அரங்கேற்றினார். அப்போது அந்த நூலின் முதல் வார்த்தையான ‘ஆக்குமாறயனாம்’ என்னும் கவியைக் காப்பாக எடுத்து பாடினார்.

 

அரங்கேற்ற சபையில் இருந்தவர்கள், வில்லிபுத்தூராரை நோக்கி, ‘நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பின்னர் உங்களின் அரங்கேற்றத்தை தொடங்குங்கள்’ என்றனர். என்ன கேள்வி என்றதற்கு, ‘நீங்கள் அரங்கேற்றுவதோ வியாசரின் பாரதம்; அந்த நூலில் முதலில் விநாயகரை வணங்கும் பாடலை முதலில் பாடியே ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது; அப்படி இருக்க, நீங்களோ, பொதுவான வணக்கம் மட்டுமே சொல்லி கவியை தொடங்குகிறீர்கள்; ஏன் விநாயகரை வணங்கும் கவியை சொல்லவில்லை’ என்று கேட்டனர்.

அப்போது வில்லிபுத்தூரார் பதில் சொல்ல முடியாமல் தவித்தபோது, அவரின் மகன் வரந்தருவான் எழுந்து சபையோரைப் பார்த்து, ‘இங்கு பல சமயத்தை சேர்ந்தவர்கள் கூடி இருக்கிறார்கள்; எனவே பொதுவணக்கம் செய்வதே முறை; மேலும் விநாயகர் வணக்கத்தை, கவி தனக்குத்தானே கூறிவிட்ட பின்னரே, இந்த பொதுவணக்கத்தை  சபையில் கூறினார்’ என்று கூறி சமாளித்தார்.

சபையில் இருந்தவர்கள், ‘நீ யார்? என்று கேட்க, அவனும், நானே வில்லிபுத்தூராரின் புத்திரன் என்று கூறினார். அப்போதுதான் வில்லிபுத்தூராரும், வந்தது தன் மகன்தான் என்று தெரிந்து மகிழ்ச்சி கொண்டார்.

சபையில் இருந்தவர்கள், ‘அதுசரி, உனக்கு உன் தகப்பன் மனதுக்குள், விநாயகர் துதி பாடினார் என்று எப்படித் தெரியும் என்று கேட்டனர்.

இவர் பாடிய விநாயகர் காப்பு இதுதான் என்று கூறி இந்த கவியை பாடினார்.

‘நீடாழி யுலகத்து மறைநாலொடைந்தென்று நிலைநிற்கவே

வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்

ஏடாக மேமேரு வெற்பாகங் கூரெழுத்தாணி தன்

கோடாக வெழுதும்பிரானைப் பணிந்தன்புகூர்வாமரோ’

பின்னர், வில்லிபுத்தூரார் பாரதத்தை அரங்கேற்றி, தன் மகனை அதற்கு சிறப்பாயிரம் செய்யும்படி பணித்தார்.

 

Advertisements

ஸ்மிருதியும் சட்டமும்

பழைய இந்து சட்டமானது தர்மத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியது.

ஸ்ருதி, ஸ்மிருதி இவைகள் பழைய இந்து சட்டத்துக்கு அடிப்படைகளாக இருந்தன.

ஸ்ருதி என்பது இறைவனிடமிருந்து ஞானிகளின் காதால் என்ன கேட்கப்பட்டதோ அவையே ஸ்ருதி.

ஸ்மிருதி என்பது ஞானிகள் அவர்களின் ஞாபகத்திலிருந்து வழிவழியாக சொல்லப்பட்டு வந்தவையே ஸ்மிருதி.

ஸ்மிருதிகளே தர்மசாஸ்திரங்கள் என பண்டைய நீதிமன்றங்கள் கருதின.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை விக்னேஷ்வரா என்ற ஞானி  வியாக்கியானம் செய்தார். அதுவே மித்தாக்ஷரா என்ற இந்து சட்டம். (வங்காளம், அசாம் தவிர மொத்த இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது).

இன்றுவரையில் நடைமுறையில் இருப்பது இந்த மித்தாக்ஷரா இந்து சட்டமே. இப்போதுதான் இதில் பெருத்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

யக்ஞவால்கியர் ஸ்மிருதியை ஜிமுக்தவாகனா என்ற ஞானி வியாக்கியானம் செய்தார். இதுவே தயாபாகா என்ற இந்து சட்டம். (வங்காளப் பகுதியில் மட்டும் இது பிரபலம்).

தொடர்ந்து வெகுகாலமாக ஒரு மக்கள்கூட்டம் ஒருவகையான பழக்கவழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் அதுவும் ஒருவகை சட்டமே. (the law of Custom).

மதுரை கலெக்டர் Vs முத்துராமலிங்க சேதுபதி, இராமநாதபுரம்.

இது பிரிட்டீஸ் காலத்தில் நடந்த ஒரு வழக்கு.

ராமநாதபுரத்தின் ஜமின்தார், தனக்கு வாரிசு இல்லாமல் இறந்துவிடுகிறார். வாரிசு இல்லையென்றால் அந்த ஜமீன் சொத்து பிரிட்டீஸ் அரசாங்கத்துக்கு போய்சேரும்.

கணவர் உயிருடன் இருக்கும்போது அதிகாரம் கொடுத்தால் அவரின் மனைவி சுவீகார புத்திரனை தத்து எடுத்துக் கொள்ளலாம். ஜமின்தார் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் ஜமின்தாரின் மனைவியான ராணி பர்வதவர்த்தினி அவர்கள் தன் கணவனின் பங்காளிகளின் சம்மதத்தைப் பெற்று ஒரு மகனை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.

இருந்தபோதிலும், பிரிட்டீஸ் அரசு, இந்த ஜமீன் சொத்து வாரிசு இல்லாத சொத்து என்றும், ஜமீன்தார் உயிருடன் இருக்கும்போதே தத்து எடுக்க எந்த அதிகாரமும் அவரின் மனைவியான ராணிக்கு கொடுக்கவில்லை என்றும் கூறி ஜமீன் சொத்தை அரசாங்க சொத்தாக அப்போதைய மதுரை கலெக்டர் உத்திரவு பிறப்பித்தார்.

ஆனாலும் ராணியின் தத்து மகன் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் பிரிட்டீஸ் கலெக்டரின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, எங்கள் குலவழக்கப்படி கணவரின் விதவை மனைவி, கணவரின் பங்காளிகள் சம்மதித்தால் ஒரு மகனை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நெடுங்கால பழக்க வழக்கம் உள்ளது என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கானது லண்டனில் உள்ள பிரைவி கவுன்சில் கோர்ட் வரை சென்றது. அங்கு இந்துமத சாஸ்திரங்களை அலசி, திராவிட ஸ்கூல் என்னும் மதராஸ் ஸ்கூல் பழக்கவழக்கப்படியும், சந்திரிகா ஸ்மிருதி, ப்ரசார மாதவிய ஸ்மிருதிப்படியும் இவ்வாறு செய்ய சாஸ்திரத்தில் இடமுண்டு என்று கண்டுகொண்டு, முத்துராமலிங்க சேதுபதிக்கு சாதகமாக தீர்ப்புக்கூறி சொத்தை அவரிடமே ஒப்படைத்தனர்.