மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9

வளர்ப்பு குழந்தைக்கு யார் கார்டியன்? (இந்து வளர்ப்பு குழந்தை)

இந்து மதத்தில் மட்டுமே வளர்ப்பு குழந்தைகளை தத்து (Adoption) எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. மற்ற மதங்களில் அந்த பழக்கம் இல்லை. (இப்போது சட்டம் மாறிவிட்டது). இந்து மதத்தில் தத்து என்னும் வளர்ப்பு குழந்தைகளை எடுத்து வளர்ப்பர். இதை அந்த குழந்தை 14 வயதுக்குள் இருக்கும்போது, அதன் தகப்பன்-தாய் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்ப்பர். இப்படி தத்து எடுத்து வளர்த்த குழந்தைக்கு இயற்கை பெற்றோர் இருக்கும்போது, வளர்ப்பு பெற்றோர் இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? இதற்கு பதிலாக, இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 7-ல் சொல்லப் பட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு குழந்தைகளுக்கு அதன் வளர்ப்பு தந்தை இயற்கை கார்டியனாக இருக்கலாம், அவருக்குப்பின் (அவர் இயங்காமல் போனால்), வளர்ப்புத் தாய் இயற்கை கார்டியனாக இருக்கலாம்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-8

தாய் கார்டியன் ஆகமுடியுமா?

அப்படியென்றால், இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 6-ன்படி, தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தகப்பன்தான் அவன் மைனர் குழந்தைக்கு (மகனோ, மகளோ) இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? தாய் இருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முக்கியமான வழக்கு வருகிறது. அதில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்குகிறது. இது ஒரு விசித்திரமான வழக்குதான். பிரிவு 6-ல் “தகப்பனும், ‘தகப்பனுக்குப்பின் தாயும்’ இயற்கை கார்டியனாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளது.

அப்படியென்றால் தந்தை உயிருடன் இருக்கும்வரை அவர்தான் கார்டியனாக இருப்பாரா? தந்தை உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்கமுடியாதா? என்ற கேள்வி எழுந்தது. பிரிவு 6 அப்படித்தான் சொல்கிறதா? இதுவரை பல உயர்நீதிமன்றங்கள், தகப்பன் உயிருடன் இருக்கும்வரை தாய் கார்டியனாக இருக்க முடியாது என்றுதான் தீர்ப்புக்களை கூறியுள்ளது. “the father and after him, the mother” என்றுதான் பிரிவு 6-ல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த “after him” என்ற வார்த்தைக்கு “இறப்புக்குப்பின்” என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது. தகப்பன், உயிருடன் இருக்கும்போதே, அவனால் செயல்பட முடியாமல்போனால், தாய் கார்டியனாக இருக்கலாம் என்றுதான் அதன் பொருளை யூகிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளது. அந்த வழக்குதான் Githa Hariharan v. Reserve Bank of India, AIR 1999 SC 1149.

இந்த வழக்கில், “தகப்பன், மைனரின் விஷயங்களில் தலையிட விருப்பம் இல்லாமல் திரிந்தாலும், அல்லது தகப்பனும் தாயும் சேர்ந்து முடிவு செய்திருந்தாலும், அல்லது தாயிடமே அந்த குழந்தை முழுப் பொறுப்பில் இருந்தாலும், தகப்பனார் இந்த நாட்டில் இல்லாமல் இருந்தாலும், குழந்தையை கவனிக்க முடியாமல் தகப்பனுக்கு ஏதாவது ஒரு குறை இருந்தாலும், அப்போதெல்லாம் தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்கலாம். என்று தீர்ப்பு கூறிவிட்டது. இந்த வழக்கிலும், தகப்பன் உயிருடன் இருக்கிறார். ஆனால் தாயை விட்டு பிரிந்து இருக்கிறார். குழந்தை தகப்பனிடம் இல்லை. தாயுடன் வசிக்கிறது. குழந்தைக்கு பாங்கில் பணத்தை டெப்பாசிட் செய்கிறார் தாய். அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்கமுடியும் என்றும் எனவே தகப்பனின் கையெழுத்து வேண்டும் என்றும் பேங்க் சொல்லிவிட்டது, ஆனால், தாயோ, குழந்தை என்னிடமே வளர்கிறது. தகப்பன் குழந்தையுடன் வாழவில்லை. பிரிந்து வாழ்கிறார். குழந்தைக்கு பேங்கில் கட்டும் டெப்பாசிட் பணம் தாயின் பணமே. இப்படி இருக்கும்போது, தகப்பன் கார்டியன் என்பதை ஏற்க முடியாது என்று வழக்கு சுப்ரீம்கோர்ட் வரை சென்று அந்த வழக்கில்தான் இந்த அதிரடியான தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நாள் முதல், தாயும் கார்டியனாக இருக்கலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பும் கிடைத்தது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-7

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-7

இயற்கை கார்டியன்:

இயற்கை கார்டியனாக (Natural Guardian) முதலில் தந்தையும், தந்தைக்கு பின்னர் தாயும் கார்டியன் என்று சட்டம் சொல்கிறது. எப்போது தந்தை கார்டியன், எப்போது தாய் கார்டியன் என்றும் பிரித்துச் சொல்லவில்லை. ஆனாலும், பிறந்த குழந்தையிலிருந்து அதன் ஐந்து வருடங்களை வரை கண்டிப்பாக அந்தக் குழந்தை தன் தாயிடம்தான் இருக்க வேண்டும் கூறுகிறது. தாய் கார்டியன் என்று சொல்லவில்லை. தாயின் பாதுகாப்பில் இருக்கும் அந்தக் குழந்தை என்றுதான் சொல்கிறது. தந்தை மதம் மாறிவிட்டாலும், சந்நியாசியாக ஆகி விட்டாலும் அவரின் மைனர் குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது.

1980ல் ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், “தந்தை தான்தோன்றித் தனமாக திரிந்து கொண்டு குழந்தையை பராமரிக்காமல் அவரின் கடமையை செய்யாமல் இருந்தாலும் அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அவரேதான் கார்டியனாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மைனரின் தாய் கார்டியனாக இருக்க முடியாது என்று ஒரு தீர்ப்பை கொடுத்தது. கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், மைனர் குழந்தை தன் தாயிடம் தனியே பிரிந்து இருந்தாலும் அந்த தாய் அந்த குழந்தைக்கு கார்டியனாக இருக்க முடியாது. அதன் தகப்பன்தான் கார்டியனாக இருக்க முடியும். டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், கோர்ட் உத்தரவின்படி தகப்பன் கார்டியன் நிலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டால்தான், அந்த குழந்தையின் தாய் கார்டியனாக இருக்க முடியும் என்று சொல்லப் பட்டுள்ளது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-6

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-6

இந்து மைனர்களுக்கு கார்டியன்கள்;

18 வயதுக்கு குறைந்த வயதுடைய மைனருக்கு கார்டியன்களை, இரண்டு வகையாக சொல்கிறார்கள். ஒன்று, இயற்கை கார்டியன்; மற்றொன்று உயில்மூலம் ஏற்பட்ட கார்டியன். இயற்கை கார்டியன் என்பவர் அந்த மைனர் குழந்தையின் தந்தை மற்றும் தந்தைக்கு அடுத்த அந்த மைனரின் தாய் ஆகிய இருவரையும் இயற்கை கார்டியன் என்கிறார்கள். இயற்கை கார்டியனான தந்தை ஏதாவது ஒரு உயில் எழுதிவைத்து அதன்படி அவரின் இறப்புக்குப் பின்னர் அவரின் மைனர் குழந்தைக்கு யாரையாவது அவர் நம்பும் நபரை கார்டியனாக இருந்து மைனரையும் அவரின் சொத்துக்களையும் பாதுகாத்து அவர் மேஜர் வயதை அடைந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கும்படி ஒரு உயில் எழுதி வைத்திருப்பார். அப்படி உயில் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியனை டெஸ்டமெண்டரி கார்டியன் அல்லது உயில் கார்டியன் என்பர். டெஸ்ட்டமெண்டரி என்றால் உயிலை விட்டுச் சென்றவர் என்று பொருள்.

இந்த இரண்டு வகை கார்டியன்கள் இல்லாமல் மற்றொரு வகை கார்டியனும் உண்டு. அது கோர்ட்டால் நியமிக்கப்படும் கார்டியன். இந்த வகை கார்டியன்கள் இல்லாமல் பல காலத்தில் (1956க்கு முன்னர்) வேறு ஒருவகையான கார்டியனும் இருந்தது. அந்த கார்டியனுக்கு டி-பேக்டோ கார்டியன் de-facto என்று பெயர். அந்த டி-பேக்டோ கார்டியனை இப்போது சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனால், இதற்கு முன்னர் டி-பேக்டோ கார்டியனான அந்த மைனரின் சகோதரர், பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டன், மாமா, போன்றோர், அந்த மைனரின் உடலுக்கு கார்டியனாக (guardian to the person) இருந்தார்கள். அவர்கள் மைனரின் சொத்துக்கு கார்டியனாக இருக்க முடியாது. இப்போது இந்த டி-பேக்டோ கார்டியன்கள் சட்டப்படி செல்லாது. இயற்கை கார்டியனாக தந்தை, தாய் மட்டுமே கார்டியனாக இருக்க முடியும். அப்படி இல்லையென்றால், கோர்ட் மூலம் கார்டியனை நியமிக்கலாம். கோர்ட்டானது, யார் சரியான கார்டியன் என முடிவு செய்து நியமிக்கும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-5

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-5

இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இந்துமத மைனரின் உடல் பாதுகாப்புக்கும், சொத்து பாதுகாப்புக்கும் 1956-ன் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் ஆக்ட் 1956ம், மைனர் சொத்துக்களை விற்பனை செய்யும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும், நீதிமன்ற அனுமதியை எப்படி பெறவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890ம் ஆக இரண்டு சட்டங்களுமே இந்துமத மைனர்களுக்கு செல்லபடியாகும். இரண்டு ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் என்று அந்த 1956 இந்தமத சட்டத்திலேயே சொல்லியுள்ளார்கள்.

ஆனால், கிறிஸ்தவ மைனர்களுக்கு பழைமையான பிரிட்டீஸ் சட்டமான கார்டியன்ஸ் & வார்டு ஆக்ட் 1890 மட்டுமே செல்லும். முஸ்லீம்களுக்கு பொதுவான காரியங்களுக்கு இந்த கார்டியன் & வார்டு ஆக்ட் 1890ம், திருமணம் போன்றவற்றுக்கு முஸ்லீம் மதச்சட்டமும் செல்லும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-4

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-4

அதேபோல, இந்தியாவில் பிரிட்டீஸ் அரசு காலத்திலேயே இந்த இந்து சட்டம் 1956 வருவதற்கு முன்னரே, 1890-லிருந்து ஒரே சட்டம் இருந்து வருகிறது. இன்றும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890 என்று பெயர். இது எல்லா மதத்தினருக்கும் உள்ள ஒரு பொதுவான சட்டம். அதாவது பொதுவாக ஒரு மைனரின் சொத்தை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும், (மைனரைப் பாதுகாப்பது என்றால், அவரை படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது, நோய்களிலிருந்து காப்பாற்றுவது போன்றவை), மைனரின் சொத்துக்களை எப்படி பாதுகாக்க வேண்டும், மைனரின் சொத்தை விற்க வேண்டிய நெருக்கடி வந்தால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி உள்ளது இந்த 1890 சட்டம்.

இந்த 1890 சட்டப்படிதான் எல்லா மைனர்களின் உடல் பாதுகாப்பும், சொத்த பாதுகாப்பும் இருக்க வேண்டும். அந்த மைனர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த 1890 சட்டம்தான் அவருக்கு வழிகாட்டி. அப்படியென்றால், இந்துமத மைனர்களுக்கு தனியே ஒரு சட்டம் இருக்கிறதே. இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 அது எதற்கு என்ற கேள்வி வரலாம். ஆம். இந்துமத மைனர்களுக்கு இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ம் அதனுடன் சேர்ந்து பிரிட்டீஸ் காலத்து பழைய சட்டமான கார்டியன்ஸ் & வார்டு சட்டம் 1890ம் சேர்ந்தே நடைமுறையில் இருக்கும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3

ஆக வெளிஉலக வேலைகளான, சொத்து வாங்குவது, ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கையெழுத்து செய்து கொள்வது, வழக்கு நடத்துவது போன்ற விஷயங்களில் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டம்தான், அதாவது 18 வயது அல்லது 18 வருடத்தை பூர்த்தி செய்திருப்பவர் மட்டுமே மேஜர் வயது உடையவர் என்றும், அவ்வாறு 18 வயது நிரம்பியவர் மட்டுமே தனியாக செயல்பட முடியும் என்றும் இன்றைய சட்டம் தெளிவாக்குகிறது. 18 வயது முடிவடையாதவர் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியன் என்னும் பாதுகாவலர் வேண்டும். கார்டியன் என்னும் பாதுகாவலர் என்றால் மைனரின் உடலைப் பாதுகாக்கவும், அவரின் சொத்துக்களை பாதுகாக்கவும் இருப்பவரே கார்டியன் என்னும் பாதுகாவலர். உடலுக்கும் சொத்துக்குமான இரண்டுக்கும் பாதுகாவலராக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராகவும் இருக்கலாம். இந்த பாதுகாவலர் யார் யார் என்பதைப்பற்றித்தான் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

அந்த பாதுகாவலரின் அதிகாரங்கள் என்ன என்றும் அவர்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் இந்த சட்டம் சொல்கிறது. இந்து மதத்தைச் சார்ந்த மைனருக்கு இரண்டு வகையில் சொத்துக்கள் கிடைக்கும். ஒன்று அவரின் பூர்வீக வழியில் மைனருக்கு கிடைக்கும் “பூர்வீகச் சொத்துக்கள்’. மற்றொன்று அந்த மைனரே, அதாவது அவரின் பணத்தைக் கொண்டே அந்த மைனரின் பெயரில் வாங்கப்பட்ட “தனிச் சொத்துக்கள்” உண்டு. இந்த சொத்துக்களில் அந்த இந்து மைனரின் பாதுகாவலரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைத்தான் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2

அதன்பின்னர், சுதந்திர இந்தியாவில் 1956ல் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ஐ கொண்டு வந்தனர். இந்த புதிய சட்டத்தின்படி, “பழைய இந்து மதத்தில் எதைச் சொல்லி இருந்தாலும், அதையெல்லாம் தூர எரிந்துவிட்டு, இனிமேல், மைனர் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 18 வயது அல்லது பிறந்து 18 வருடங்கள் முடிந்திருந்தால் மட்டுமே அவர் மேஜர் அல்லது சட்டபூர்வ வயதுக்கு வந்தவர் என்று கருதப்படும் என்றும், அவ்வாறு மேஜர் ஆன ஒருவரே உலகில் உள்ள எல்லா வேலைகளையும் தானாக முடிவெடுக்க, அதை நிறைவேற்ற முடியும் என்று சட்டத்தை கொண்டுவந்து விட்டது.

முடிவில், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு (ஜெயின், சீக்கியர், புத்தம் இவைகள் உட்பட) இந்த புதிய இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் நடைமுறையில் உள்ளது. (அதாவது 18 வயது முடியும்வரை மைனர் என இந்து சட்டம்).

கிறிஸ்தவர்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை, எனவே அவர்கள் இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ன் படி நடந்து கொள்ள வேண்டியது. (அதாவது அந்த சட்டப்படி 18 வயது முடியாதவரை மைனர் என கருதப்படுவார்).

முஸ்லீம்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை. எனவே அவர்கள் நிக்காஹ் என்னும் திருமணம், தலக் என்னும் டைவர்ஸ், ஹிபா என்னும் தானம் முதலிய மத விஷயங்களில் புனித குரானில் சொல்லியுள்ளபடியும், ஷரியத் சட்டத்தில் சொல்லியுள்ளபடியும் மைனர் வயதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (14 வயது வரை மைனர் என்று கருதுகிறார்கள்). மற்ற உலக சட்ட விஷயங்களில் 18 வயது பூர்த்தி ஆகாதவர் மைனர் என்று இந்தியன் மெஜாரிட்டி சட்டத்தில் சொல்லியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.

**

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-1

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-1

Minority and Guardianship

இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்ற சட்டமானது 25 ஆகஸ்டு 1956 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வருவதற்குமுன்னர், பழைய இந்து சட்டமே இருந்து வந்தது.  இந்த பழைய இந்து சட்டப்படி, “மைனர்” என்பவர் (இளவர் என்றும் சொல்கிறார்கள்) தென்னிந்தியாவில் 15 வயது பூர்த்தி அடையாதவர் மைனர் என்றும், வட இந்தியாவில் 16 வயது பூர்த்தியடையாதவரை மைனர் என்றும் சட்டம் இருந்ததாம். இந்த புதுச் சட்டமான இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 வந்தபின்னர், மைனரின் வயதை 18 வயதாக பூர்த்தி அடையாதவரை மைனர் என்று வகுத்துக் கொண்டனர்.

இந்த 18 வயது தத்துவம் ஏற்கனவே பிரிட்டீஸார் இந்தியாவை ஆளும் காலத்திலேயே ஒரு சட்டமாக 1875லேயே கொண்டு வந்துவிட்டது. அந்தச் சட்டத்துக்குப் பெயர் “இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875.” ஏற்கனவே அந்த சட்டம் நடைமுறையில் இருந்தால், 1956ல் எதற்கு இந்து மைனாரிட்டி சட்டத்தை கொண்டு வந்தார்கள்? காரணம்: 1875 இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி, இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டமாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர் மேஜர் வயதை அடைந்தவர் என்று சட்டம் கருதியது உண்மைதான்.

ஆனாலும், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன. அந்தந்த மதங்கள் ஒவ்வொரு கோட்பாடுகளை அந்தந்த மத மக்களுக்கு ஊட்டிவிட்டிருக்கின்றன. எனவே, இந்த மதங்களில் கோட்பாடுகளில் தடையிட அரசாங்கம் விரும்பவில்லை. எனவே, இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 ல் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். அதன்படி, அந்தந்த மதங்களின் “திருமணம், விவாகரத்து, தத்து எடுத்தல்” போன்ற மதம் சார்ந்த விவகாரங்களில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ஐ நுழைக்க முடியாது.

அதாவது, திருமணம் போன்ற விஷயங்களில் அந்தந்த மதங்களில் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்களோ அந்த வயதில் (மைனராக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும்) திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 தலையிடாது. மற்ற விவகாரங்களில், அதாவது சொத்து வாங்குவது, விற்பது, உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்வது, கோர்ட்டில் வழக்கு போடுவது, இவைகளில், இந்த இந்தியன் மெஜாரிட்டிட சட்டமே செல்லும் என்று பிரிட்டீஸ் அரசு 1875ல் சட்டம் கொண்டு வந்தது.

**

Rummel v. Estelle

US case ~ Rummel v. Estelle 445 US 263 (1980)

டெக்சாஸ் மாநிலம். அமெரிக்காவில்தான். இங்கு ஒருவர் பெயர் ‘ரம்மல்’. இவர் 1964ல் ஒரு குற்றத்தை செய்கிறார். அது, கிரெடிட் கார்டை ஏமாற்றும் எண்ணத்துடன் உபயோகித்து $80 சுருட்டிவிட்டார். அதற்கு அந்த டெக்சாஸ் மாநில சட்டப்படி 2முதல் 10 வருடம் சிறையாம். இவர் அந்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். எனவே மூன்று ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது.

இவர், மறுபடியும், இரண்டாவதாக ஒரு குற்றத்தை செய்கிறார். அது, 1969ல். அதன்படி, போலிச் செக்கை தயாரித்து, அதைக் கொண்டு பாங்கை ஏமாற்றி $28 கையாடல் செய்து விட்டார். அந்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். அதனால், அவருக்கு நான்கு வருடங்களை தண்டனை கொடுக்கிறார்கள்.

இதற்குப்பின், மூன்றாவது ஒரு குற்றத்தை செய்கிறார். இவரின் கை சும்மா இருக்காதுபோல! அரித்துக் கொண்டே இருக்கும்போல! மூன்றாவது குற்றம், 1973ல். ஏசி-யை ரிப்பேர் செய்து தருகிறேன் என்று சொல்லி $120 பெற்றுக் கொண்டார். அதை செய்து தரவில்லை. பணத்தைக் கொடு என்று கேட்டபோது, தர மறுக்கிறார். இதுவும் குற்றமாம். இது கடன் கிடையாது. பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றுவதாம். இதுவும் ஒருவகை திருட்டுத்தானாம். இவர் இந்தக் குற்றத்தையும் ஒப்புக் கொள்கிறார். அதற்குறிய தண்டனையாக 2 முதல் 10 வருடம் சிறைதண்டனை கொடுக்கலாமாம்.

ஆனால், அந்த டெக்சாஸ் மாநிலத்தில் இன்னொரு சட்டமும் உள்ளதாம். அதாவது, ஒருவர் தொடர்ந்து மூன்றுமுறை குற்றம் செய்து தண்டை அடைந்தால் (அதாவது இவர் கேடி என்று முடிவானால்) Texas three strikes law டெக்சாஸ் மூன்று அடி சட்டம் வந்துவிடுமாம். அதன்படி, இவர் தொடர் குற்றச் செயலில் ஈடுபடுபவர் என்று ஆகிறதாம். அதனால் இவருக்கு “ஆயுள்தண்டனை” வழங்குகிறது. ஆனால் பரோலில் அவ்வப்போது வெளியில் வரலாம் என்று அந்த மூன்று அடிகள் சட்டத்தில் உள்ளதாம். எனவே இவருக்கு அந்த மூன்றாவது வழக்கில் இந்த ஆயுள் தண்டனையை வழங்குகிறார்கள்.

அவர் இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து டெக்சாஸ் அப்பீல் கோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அது மறுத்துவிடுகிறது. அடுத்து, பெடரல் மாவட்ட கோர்ட்டுக்கு போகிறார். அவரை ஆயுள் சிறைவைப்பது சட்டபூர்வமானதல்ல என்று கேபியஸ் கார்பஸ் மனு செய்கிறார். அதுவும் மறுக்கப்படுகிறது. மூன்று குற்ற சட்டத்தில்தானே ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் எனவே சட்டப்படிதானே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று மறுத்து விடுகிறார்கள். அத்துடன் அந்த மூன்று குற்றச் சட்டத்தின்படி, இந்த ஆயுள்தண்டனை என்பது 12 வருடம்; அதிலும் பரோலில் வெளியே வரவும் செய்யலாம் என்றுதான் சட்டம் டெக்சாஸ் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியுள்ளதாக, அந்த மாவட்ட கோர்ட் சொல்லியுள்ளது.

ஆனாலும், வழக்கு அதற்கு மேல் உள்ள கோர்ட்டான, அமெரிக்க கோர்ட் ஆப் அப்பீல் என்னும் 5-வது சர்கியூட் கோர்ட்டுக்கு வருகிறது. (இந்த மாதிரியான சர்க்யூட் கோர்ட்டுகள், இரண்டு மூன்று மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் இருக்கும்; அது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழே இருக்கக் கூடியது. ஆனால், அந்தந்த மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே இருக்கும் இந்த சர்கியூட் கோர்ட் என்பது).

அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் (யூ.எஸ். கோர்ட் ஆப் அப்பீல் 5-வது சர்க்யூட்) இந்த வழக்கு வருகிறது. அங்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அநியாய தண்டனை கொடுக்கக் கூடாது என்பதற்கு எதிராக உள்ளதாக அந்த குற்றவாளியின் வக்கீல் கூறுகிறார். எனவே இதில் அரசியலமைப்பு சட்டத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை விசாரிக்க வேண்டி இருப்பதால், அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் உள்ள எல்லா நீதிபதிகளும் ஒன்றாக ஒரே கோர்ட் அறையில் உட்கார்ந்து அந்த வழக்கை விசாரித்தார்கள். இவ்வாறு ஒரு கோர்ட்டின் மொத்த நீதிபதிகளும் ஒரே அறையில் ஒரு வழக்கை விசாரிக்க உட்கார்ந்தால், அதை “en banc” “எண் பான்க்” என்பார்கள். அதில் நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

எனவே வழக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு போகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில், அதில் உள்ள குற்றவாளி மூன்று குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளார். எனவே அவரை இந்த மூன்று குற்ற தண்டனையின் பெரிய தண்டனையாக ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டியது சட்டமாகிறது என்று தீர்ப்பு கூறியுள்ளதை மேற்கோளாக காட்டினர்.

தீர்ப்பு: அதன்படி இந்த குற்றவாளி மூன்று குற்றங்களை செய்திருப்பதால் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது 12 வருடம்தான். அதில் பரோலில் வெளியே வந்துவிட்டு போகலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இத்தகைய ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை காலத்தில் பரோலில் வெளியே வரமுடியாது என்று சட்டமே உள்ளது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

டெக்சாஸ் மாநிலத்தில் குற்றங்களுக்கான தண்டனைகள்:

குற்றங்களை அங்கு Felony and Misdemeanor என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கிறார்கள். முதலாவது பெரிய குற்றங்கள், பின்னது, சிறிய வகை குற்றங்கள்.

தண்டனைகள் அதற்கு ஏற்றாற்போல கோர்ட் வழங்கும்.

Classification of Felonies:

1) Capital felonies

2) Felonies of the First degree;

3) Felonies of the Second degree:

4) Felonies of the Thrid degree;

5) State jail felonies.

Classification of misdemeanors:

1) Class A misdemeanors; ($4000 வரை அபராதம், 1 வருட சிறை)

2) Class B misdemeanors; ( $2000 அபராதம், 180 நாள் சிறை)

3) Class C misdemeanors; ($500 வரை அபராதம் மட்டும்; மிகச் சிறிய குற்றம், இதற்கு தண்டனையே மிக மிகச் சிறியதாகவே இருக்கும். காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடு என்பது மாதிரி)

Felony என்னும் பெரிய குற்றங்களுக்கு:

1) 18 வயதுக்குள் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலில் வரலாம்.

2) 18 வயதுக்கு மேல் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலும் கிடையாது.

3) கடுமையான குற்றத்தை செய்திருந்தால் தூக்கு தண்டனை.

4) 1-வது டிகிரி பெலோனி குற்றத்திற்கு 5வருடம் முதல் 99 வருடம் வரை சிறை, $10,000 அபராதம்.

5) 2-வது டிகிரி பெலோனி குற்றத்திற்கு 2 வருடம் முதல் 20 வருடம்வரை சிறை, $10,000 அபராதம்.

6) 3-வது டிகிரி பெலோனி குற்றத்திற்கு $10,000 மட்டும் அபராதம்.

**