பாணினி: இவர் சமஸ்கிருதத்தின் தந்தை;

பாணினி: இவர் சமஸ்கிருதத்தின் தந்தை; 

இவர் 4000 வருடங்களுக்கு முன்னே காந்தார தேசத்தில் ‘சலாதுரய நகரத்திலே பிறந்தவர்.  இவரின் தந்தையார் பெயர் ‘பணினி’ என்பர். தாயார் பெயர் ‘தாக்ஷி’ என்பது. தாக்ஷி புத்திரரெனவும் இவர் வழங்கப்பட்டார்.

இவர் சிறுவயதில் பள்ளி செல்லும் காலத்தில் மந்தபுத்தி (மிகக் குறைந்த அறிவுத்திறன்) உடையவர். எனவே இவரை இவரின் குருவும், உடன் படிக்கும் மற்ற மாணவர்களும் அவமானப் படுத்தி வந்தனர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாணினி, ஒருநாள், தனது வீட்டுக்குச் செல்லாமல், நேராக இமயமலையை நோக்கி நடந்து, அங்கே சிவனை நோக்கித் தவங்கிடந்தார். இவரின் நோக்கத்தை அறிந்த சிவனும் இவருக்கு சகல சாஸ்திரங்களுக்கும் மூலசாஸ்திரமாகிய ‘மகேஸ்வர சூத்திரோபதேசம்’ இவைகளை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட பாணினி அந்தக் கலைகளெல்லாம் வல்லவராயினார்.

இவர் அந்த ‘மகேஸ்வர சூத்திரங்களை’ ஆதாரமாகக் கொண்டு செய்த சமஸ்கிருத வியாகரணம் ‘பாணினீயம்’ எனப்படும். இது எட்டு அத்தியாயங்களை உடையதால் ‘அஸ்டாத்தியாயி’ எனவும் பெயர் பெறும். பாணினீயம் என்னும் சம்ஸ்கிருத வியாகரணம் 3990 சூத்திரங்களை உடையது.

இவரும் வரருசியும் ஒரேகாலத்தவர். பாணினி பகவான் வியாகரணம் செய்யுமுன்னே வரருசி காதந்திரம் என ஒரு இலக்கணம் வகுத்தாரேனும், பாணினி பகவான் செய்தருளிய நூலே சிறந்ததெனக் கண்டு அதற்குத் தாம் ஒரு உரை இயற்றினார். அவரே பாணினீயத்துக்கு முதல் உரையாசிரியர்.

பாணினீயத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்தவர் பதஞ்சலி பகவான். அது மிகுந்த விரிவான விளக்கங்களுடன் இருந்ததால், அதற்கு ‘மஹாபாஷியம்’ என்னும் பெயர் வந்தது. பதஞ்சலி பகவான் தாம் இயற்றிய பாஷியத்திலே ‘இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்’ என்று கூறியுள்ளார். ஐரோப்பிய பண்டிதர்களும் தான் கண்ட பாஷைகளில் பாணினீயத்துக்கு இணையான இலக்கணம் ஒன்றில்லை என்று பாராட்டி உள்ளனர்.

பாணினீயத்துக்கு முன்னரும் ஐந்திர முதலிய வியாகரணங்கள் பல தோன்றி நடைபெற்றனவேனும், அவையெல்லாம் அது தோன்றிய பின்னர் கற்றல் எளிதல்ல என்று அக்காலத்து மக்களால் கைவிடப் பட்டன. ஆகவே பாணினீயமே நின்று நிலவுவதாயிற்று.

அது வேத-மொழிக்கும் சாமானிய மொழிக்கும் இலக்கணம் கூறுவது. பூர்வ வியாகரணங்கள் எல்லாம் வேத மொழிக்கே இலக்கணம் கூறுவன. பாணினீயம் இரண்டுக்கும் கூறுவதால் மிகச் சிறப்பானதாயிற்று. அதுமற்றுமன்றி அது பூர்வ வியாகரணங்களைப் போல வேதத்திற்கும் அங்கமாயிற்று.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த வியாகரணம் செய்த பாணினியின் பிறந்த காலம் 2000 வருடங்களுக்கு முன்னதென்பர்.

பாணினீயத்துக்கு உள்ளே வரும் யவனபதம் (யவன வார்த்தை) கிரேக்கரைக் குறிப்பதென்பது சிலரின் கருத்து. அவ்வாறு கிரேக்கரை குறிக்கவில்லை என்பது கௌதம தருமசூத்திரம், மனு, ராமாயணம், பாரதம், காசிகாவிருத்தி, முதலியவற்றின் உள்ளே கூறப்படும் யவன வரலாற்றால் பெறப்படும்.

ராமாயணம், ‘யவனராவார், சகரனாலே விசுவாமித்திரரது ஆணைப்படி முண்டிதஞ் செய்து ஓட்டிவிடப்பட்ட க்ஷத்திரியர்’ என்று கூறும். பாரதம், ‘யவனர், துர்வசுவினது சந்ததியராவர்’ என்று கூறும். காசிவிருத்தியும், விஷ்ணுபுராணமும், ‘யவனர், தனது தலையை முண்டிதஞ் செய்து கொள்பவர்கள் (தலையை மொட்டையடித்துக் கொள்பவர்கள்)’ என்றும் கூறும்.

கிரேக்கரோ தமது தலையை மழித்துக் கொள்ளும் பழக்கமுள்ளவர்கள் அல்லர். இது கிரேக்கனாகிய ‘தெமொஸ்தனெஸ்’ (Demosthenes) என்பவன்தான், தான் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, தனது தலையை மழித்துக் கொண்டு ஓர் அறையின் உள்ளே மறைந்திருந்து நூல் ஓதி வந்தான் என்பதால் இது நன்கு புலப்படும்.

ஆதலின் பாணினி குறித்த யவனரும் வேறு. ஐரோப்பிய பண்டிதர் குறிக்கும் யவனவரும் வேறென்பது உண்மையே.

ஆதலின், கிரேக்கர் படையெடுத்து ஆரியவர்த்தத்தைத் தாக்கிய பின்னர் பாணினி விளங்கினார் என்னும் கொள்கை ஏற்புடையதன்று.

பௌத்தர் கொள்ளும் பொருளும் வேறென்பது பாணினி பாஷ்யத்துள்ளே பதஞ்சலியார் எடுத்துக் கூறும், “தீபங்காற்றினால் நிர்வாணமுற்றது” என்பது போன்ற உதாரணங்களால் விளங்கப்படும்.

பாணினி தான் செய்த வியாகரணத்தை காஷ்மீர தேசத்து அரசனான ‘காநிஷ்க மகாராஜன்’ சபையிலே அரங்கேற்றித் தம்மை முன்னர் அவமதித்த புலவர்களை யெல்லாம் வாதத்திலே வெற்றி கொண்டு கலையெல்லாம் முற்ற உணர்ந்த பெரும் பண்டிதரென்று திசையெல்லாம் போற்ற விளங்கினார்.

இவரின் திருஉருவத்தை சிலையில் அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தவனாகிய காநிஷ்கராஜன், சந்திரகுப்தனுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அரசு செய்தவன். இதனாலும், பாணினி முனிவரின் காலம் 4000 வருடங்களுக்கும் முந்தையது என்பதைக் காணலாம். பாணினி முனிவரின் சரித்திரம் ‘கதாசரித் சாகரம்’ என்னும் நூலிலும் அதற்கு முதல் நூலாகிய ‘பிருகத் கதையிலும்’ கூறப்பட்டுள்ளது.

 

Advertisements

One thought on “பாணினி: இவர் சமஸ்கிருதத்தின் தந்தை;”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s